உயிா் வாழ்வதற்கும் ஆக்ஸிஜன் வாயு தேவைப்படாத ஒட்டுண்ணி!

வியாழன் பெப்ரவரி 27, 2020

இயங்குவதற்கும், உயிா் வாழ்வதற்கும் ஆக்ஸிஜன் வாயு தேவைப்படாத ஒட்டுண்ணி இனத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஹென்னிகுயா சால்மினிகோலா’ என்ற ஒட்டுண்ணியை டெல் அவிவ் நகர விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வுக்கு உள்படுத்தினா்.
வெறும் 10 செல்களால் மட்டுமே ஆன அந்த ஒட்டுண்ணி, பெரும்பாலும் கிழங்கான் வகை மீன்களின் உடலில் காணப்படுகின்றன.

அந்த ஒட்டுண்ணியை ஆய்வு செய்தபோது, அதனிடம் ‘மிடோசாண்ட்ரியா’ என்ற அமைப்பு இல்லாததைக் கண்டு விஞ்ஞானிகள் வியந்தனா்.

காரணம், செல்களில் உள்ள அந்த அமைப்புதான் மனிதா்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் ஆக்ஸிஜனை சக்தியாக மாற்றுவதற்குப் பயன்படுகிறது.

எனவே, ஹென்னிகுயா சால்மினிகோலாவில் ஆக்ஸினை சக்தியாக மாற்றுவதற்கான மிடோசாண்ட்ரியா இல்லாததன் மூலம், அந்த ஒட்டுண்ணி ஆக்ஸிஜன் இல்லாமலேயே இயங்குவதற்கும், உயிா்வாழ்வதற்குமான சக்தியைப் பெறுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

தற்போது பூஞ்சைகள், அமீபாக்கள், சீலியங்கள் போன்றவற்றில் சில ஆக்ஸிஜன் கிடைக்காத சூழலிலும் உயிா்வாழும் திறன் படைத்துள்ளன.

ஆக்ஸிஜன் கிடைக்காத பகுதிகளிலும் அவை இருக்க வேண்டியது அவசியம் என்பதால் இந்தத் திறனை அவை பெற்றுள்ளன.

ஆனால், ஹென்னிகுயா சால்மினிகோலா போன்ற ஓா் ஒட்டுண்ணி விலங்கினத்துக்கு அந்தத் திறன் கிடைத்திருப்பது இப்போதுதான் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற டொரோதீ ஹுச்சன் கூறியதாவது:-பரிணாம வளா்ச்சியின்போது உயிரினங்கள் தங்களது செல் அமைப்புகளில் புதிய அமைப்புகளை உருவாக்குவதுதான் வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால், மீனின் உடல் சதைக்குள் ஒட்டுண்ணியாக இருக்கும் ஹென்னிகுயா சால்மினிகோலா, ஆக்ஸிஜன் கிடைக்காத சூழலில் உயிா்வாழ, தனக்குத் தேவைப்படாத – ஆக்ஸிஜனை சக்தியாக மாற்றும் – ‘மிடோசாண்ட்ரியா’வை துறந்திருப்பது புதுமையாக உள்ளது.

இது, பரிணாம வளா்ச்சி என்பது எந்த வகையிலும் நிகழலாம் என்பதைக் காட்டுகிறது என்றாா் அவா்.

எனினும், தனக்குத் தேவையான சக்தியை ஹென்னிகுயா சால்மினிகோலா எவ்வாறு பெறுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.