உயிரை இழக்கத் தயாராக உள்ளேன்!

திங்கள் பெப்ரவரி 04, 2019

உயிரை இழக்கத் தயாராக உள்ளேன். ஆனால், சமரசத்திற்கு இடம் கிடையாது என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் 'ரோஸ் வேலி', 'சாரதா சிட்பண்ட்ஸ்' மோசடி தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைப் பிரிவு விசாரித்தது. பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ராஜீவ் குமார் மேற்கு வங்காள கமிஷ்னர் ஆனார். மோசடி வழக்கை விசாரிக்கும் சிபிஐ,  ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டது.

சம்மனும் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரை விசாரிக்க கொல்கத்தாவில் அவருடைய வீட்டிற்கு சென்ற போது மாநில காவல் துறை  தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து மம்தா மற்றும் மத்திய அரசுக்கு இடையே மோதல் முற்றியுள்ளது. சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காவல் துறையினரை மம்தா பானர்ஜி பாராட்டினார். 

மாநில காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மோசடி வழக்கில் ஈடுபட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியபோது நான் வீதியில் இறங்கிப் போராடவில்லை. இப்போது,  காவல்துறை அமைப்புக்கு தலைமை வகிக்கும் கமிஷனரை அவமானப்படுத்த முயற்சித்தீர்கள். அதனால்தான் எனக்குக் கோபம் வந்தது. போராட்டத்தில் இறங்கினேன். இதற்காக என் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்,” என கூறியுள்ளார். 

வீட்டிற்கு பாதுகாப்புடன் வருவோம் என்று காவல் துறையால்  வீட்டிற்கு வாக்குறுதியளிக்க முடியாது. அப்படிப்பட்ட பணியை செய்யும் அவர்களை பாராட்டுகிறேன், அவர்களுடன் துணை நிற்பேன் என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.