உயிரை பறிக்கும் வெறிநாய்க்கடி!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.

இந்த நோய் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் இந்த நோய் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடியால் 40 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த நோய் நாய்களை தவிர பூனை, நரி, வவ்வால் போன்றவைகள் கடித்தாலும் ஏற்படும்.

வெறிநாயால் கடிப்பட்ட பசு, எருமை, ஆடு, பன்றி போன்றவைகள் கூட இந்த நோயை பரப்பக்கூடியவை ஆகும். வெறிநாய்க்கடி நோயும், பிளேக் நோயும் வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. சமஸ்கிருதத்தில் ‘ராபாஸ்’ என்றால் ‘கொடூரம் செய்தல்’ என்று அர்த்தம். அதனால் தான் இப்பெயர் ஏற்பட்டது.

வெறிநாய்க்கடி நோய் ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. கடிக்கப்பட்ட இடத்தில் இருந்து தோலின் வழியாக உள்சென்று நரம்பு மண்டலத்தை தாக்கும். இந்த வகை வைரஸ் புல்லட் வடிவில் இருக்கும். வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் நலமாக இருக்கும் மற்றொரு மனிதனை கடித்தாலும் நோய் பரவக்கூடும். வெறிநாய்க்கடி ஏற்பட்டதில் இருந்து பாதிப்பு தெரிய 20 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை ஆகலாம். அதிகபட்சமாக 30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் நோயின் தாக்கம் தெரியவரும்.

வெறிநாய்க்கடி நோய் 2 வகையான அறிகுறியால் தெரியவரும். வெறித்தனமான வகையில் கடிக்கப்பட்ட இடத்தில் எரிச்சல் அல்லது மரத்து போதல் இருக்கும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி இருக்கும். பின்னர் தண்ணீரை கண்டால் பயம், அதாவது தண்ணீரை அருகில் கொண்டு போனாலே ஒரு வகை வெறித்தனம் வரும். காற்றினை கண்டாலும் பயம் ஏற்படும். விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும்.

உடனடியாக தடுப்பு ஊசியை போடாமல் இருந்தால் அந்த நபர் 3 நாட்களில் இருந்து 5 நாட்களுக்குள் இறந்து விடுவார். இது இருதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பால் நிகழும். 20 சதவீத நோயாளிகள் வாதம் ஏற்பட்டு இறக்கிறார்கள். இவ்வகை நோய்களுக்கு முதலில் கால்களில் வாதம் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் மேல் நோக்கி பரவி வாதம் ஏற்பட்ட 7 நாட்களில் இருந்து 21 நாட்களுக்குள் இறந்து விடுவார்கள்.

வெறிநாய் கடித்து விட்டால், கடிப்பட்ட இடத்தை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இதற்கு சோப்பை பயன்படுத்தலாம். இது புண்ணின் மேல் உள்ள வைரஸ் கிருமியை நீக்க உதவும். பின்னர் மேலே கிருமிநாசினி மருந்தையோ, எரிசாராயத்தையோ தடவுவது தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

வெறிநாய் மனிதனின் தோலை கீறி இருந்தாலோ, பிராண்டி இருந்தாலோ கடிப்பட்டவரின் தோலில் சிராய்ப்பு காயம் இருந்தாலோ அல்லது நன்கு கடித்திருந்தாலோ தடுப்பூசி போடுவது அவசியம். அதோடு வெறிநாய்க்கடி இம்முனோகுளாபின் எனும் மருந்தையும் ஊசியாக போட வேண்டும். இது வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டலத்திற்குள் செல்வதை தடுக்கும். இந்த ஊசி மருந்தை வெறிநாய் கடித்த உடன் போட்டு விட வேண்டும்.

வெறிநாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-ம் நாள் 2-ம் ஊசி, 7-ம் நாள் 3-ம் ஊசி, 14-வது நாளில் 4-ம் ஊசி மற்றும் 21-வது நாளில் 5-வது ஊசியை போடுவது அவசியம். கால்நடை டாக்டர்கள் இந்த நோய் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் கடிபடுவதற்கு முன்னரே ஊசியை போட்டு கொள்வது அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உலக வெறிநாய்க்கடி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயின் தன்மையை அறிந்து நாய்க் கடித்து விட்டால் தடுப்பூசியை போட்டு கொள்வது மிக மிக அவசியம். இல்லாவிட்டால் அவர் இறப்பது உறுதி. இந்த தடுப்பூசியை பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகளும் பரவலாக இருக்கிறது. தடுப்பூசி போடும் காலகட்டங்களில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்பது முக்கிய மூட நம்பிக்கையாக உள்ளது. இது தவறு. ஆகவே நாய்க்கடி யாருக்கு ஏற்பட்டாலும் உதாசீனப்படுத்தாது தடுப்பூசி போட்டு நலமுடன் வாழ்வது நன்று!