உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஆயர் இல்லத்துக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கலாம்

வியாழன் செப்டம்பர் 17, 2020

 கடந்த வருடம் உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து கத்தோலிக்க  ஆயர் இல்லத்துக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பிரதிநிதியொருவரின்கேள்விக்கு பதிலளிக்கையில் ஹரீன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பிரதான ஆராதனையை  பேராயரே நடத்துவார். ஆனால் குண்டுவெடிப்பு இடம்பெற்ற தினத்தன்று அவ்வாறான ஆராதனை இடம்பெறவில்லை என ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் நடத்தும் பிரதான ஆராதனையில் கலந்துகொள்வதே கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அவ்வாறான ஆராதனைகள் இடம்பெறவில்லை ஏப்பிரல் 20ஆம் திகதி உயிர்த்தஞாயிறு நள்ளிரவு திருப்பலி ஒன்று இடம்பெற்றதாக அறிந்தேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.