வைகோ தாயார் மறைவு

வெள்ளி நவம்பர் 06, 2015


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று காலை 9.15 (இந்திய நேரம்) காலமானார். தாயாருக்கு வயது 98. 


நுரையீரல் சளியால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக நேற்று மாலை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை ஏழு மணி வரையிலும் நல்ல நினைவுடன் இருந்துள்ளார். 
இந்த சூழ்நிலையில் தில்லியில் இருந்து நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த வைகோ, இன்று காலை விமானத்தில் தூத்துக்குடிக்குப் புறப்பட்டுச் சென்றார். திருநெல்வேலிக்கு வைகோ வருகின்ற தகவலை அவரது தம்பி ரவிச்சந்திரன் தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் திடீரென காலை அவர் உயிர் பிரிந்துள்ளது. 


வைகோவின் தாயார் மாரியம்மாள் வைகோவின் அரசியல் வாழ்வின் நெடுகிலும் அவருக்கு துணையாகவே இருந்துள்ளார். 
உதாரணத்திற்கு நெருக்கடி நிலை காலத்தில் சேலம் சிறையில் வைகோவைச் சந்தித்தபோது, ‘மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் நம்ம ஐயாவை விடுதலை செய்து விடுவார்களாமே? என்று வயற்காட்டுப் பெண்கள் சொன்னதை வைகோவிடம் கூறியுள்ளார் மாரியம்மாள். 


‘அதற்கு நீங்கள் என்னம்மா சொன்னீர்கள்?’ என்று வைகோ கேட்க, ‘என் மகன் கொலை செய்தானா? கொள்ளை அடித்தானா? எதற்காக மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டும்? அந்த அம்மா (இந்திரா காந்தி) எத்தனை ஆண்டுகள் என் மகனைச் சிறையில் அடைத்துவைத்து இருப்பார்...பார்போம் என்று சொன்னேன்’ என்றார் மாரியம்மாள்.


இது மட்டுமல்ல இலங்கையில் இந்திய இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் களத்தில் நின்றபோது, காயம்பட்டுக் கை, கால்களை இழந்து, குற்றுயிராய் வந்து சேர்ந்த 37 விடுதலைப்புலிகளைக் கலிங்கப்பட்டி இல்லத்தில் ஓராண்டுக்கும் மேலாக வைத்துப் பராமரித்து உணவு அளித்துப் பாசம் காட்டிப் பாதுகாத்தவர் மாரியம்மாள்.


பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டபோது கலிங்கப்பட்டி வீட்டைச் சோதனையிட வந்த காவல்துறையினர், தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தைக் கழற்றியபோது, ‘அந்தப் படத்தை ஏன் எடுக்கின்றீர்கள்? ‘அந்தப் பிள்ளையும் என் மகன்தான். அதைக் கழற்றாதீர்கள்’ என்று சொல்லித் தடுத்தார்.


செண்பகவல்லி அணைக்கட்டைப் புதுப்பிக்கக் கோரி வாசுதேவநல்லூரில் வைகோ தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதம், சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி, கலிங்கப்பட்டியில் நடைபெற்ற பல்வேறு அறப்போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் அனைத்திலும் முன்வரிசையில் பங்கேற்றவர். உடல் நோயையும் பொருட்படுத்தாமல், சொட்டுத் தண்ணீரும் பருகாமல் உறுதியை வெளிப்படுத்தினார்.


2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தோல்விச் செய்தி கேட்டுக் கிராமத்துப் பெண்கள் அழுதபோது, ‘ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்கள்; அதனால் என் மகன் ஜெயிப்பது கஷ்டம் என்று எனக்கு முன்பே தெரியும்’ அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்துக் கலிங்கப்பட்டியில் பெண்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்தார்.
சசிபெருமாள் மறைவுச் செய்தி கேட்டவுடன் வீட்டில் இருந்து புறப்பட்டு, கலிங்கப்பட்டி மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் எனப் போராட்டக்களத்திற்குத் தாமாகவே வந்து நடுத்தெருவில் அமர்ந்தார். செய்தி அறிந்து வைகோ அங்கே சென்றார். போராட்டம் வெடித்தது. கலிங்கப்பட்டி மதுக்கடை மூடப்பட்டது. தமிழகம் எங்கும் பெண்கள் களத்திற்கு வந்தனர். மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுத்தது.


மறுமலர்ச்சி தி.மு.கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றவர். ‘முக்கியமான மாநாடுகள் நிகழ்ச்சிகள் நடக்கும்போது நான் இறந்துபோய், நிகழ்ச்சிக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாதே’ என்று கூறுவாராம்.


இப்படியான தாயின் இறுதி நிகழ்வுகள், நாளை(நவம்பர் 7) காலை 11 மணி அளவில் கலிங்கப்பட்டியில் நடைபெறும்
இவருக்கு வை.கோபால்சாமி(வைகோ) , வை.ரவிச்சந்திரன் என்ற 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.