வாஜ்பாய் கனவை நிறைவேற்றியதாக மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஞாயிறு ஓகஸ்ட் 11, 2019

காஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் கனவை நிறைவேற்றியதாக பிரதமர் மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வைகோ கூறினார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று காலை அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, துரை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சுப்பிரமணியன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மகேந்திரன், பார்த்திபன், வளையாபதி, எஸ்.வெற்றிவேல் உள்பட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜனதா அரசுக்கு கண்டனம்,. அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 15-ந் திகதி சென்னையில் முழுநாள் மாநாடாக நடத்துவது, கட்சியின் அமைப்பு தேர்தல்களை 2020-ம் ஆண்டில் நடத்தி முடிப்பது. தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3 ஆயிரத்து 676 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்ததற்கு கண்டனம். கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மீட்பு பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயக படுகொலை

கூட்டம் முடிந்து வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ம.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டின் காலை நிகழ்வுகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பி.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜனநாயக படுகொலையை நடத்தி இருக்கிறது மத்திய பா.ஜனதா ஆட்சி. இது குதிரையை கீழே தள்ளி குழிபறித்த கதையாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. தற்போது காஷ்மீரில் புயலுக்கு முன் நிலவும் அமைதி தான் நிலவுகிறது. அது எரிமலையாக வெடிக்கும்.

‘ஏற்க முடியாது’

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றி இருப்பதாக பிரதமர் மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபோது, மேற்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு, 35-ஏ பிரிவுகளை நீக்குவதாகவோ, பொதுசிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றோ எதுவும் கிடையாது.

வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து வந்தாலும், இந்தியாவின் தட்பவெப்ப நிலையை உணர்ந்து நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாத்தால்தான் ஜனநாயகம் இருக்கும். மதச்சார்பின்மையை பாதுகாத்தால்தான் மக்களாட்சி தத்துவம் நிலைக்கும் என்பதை உணர்ந்த தலைவராக இருந்தார்.

‘முதலில் பதில் சொல்லட்டும்’

காங்கிரஸ் தலைவர்கள் என்னை பற்றி விமர்சிப்பதற்கு ஏற்கனவே நான் பதில் அளித்துவிட்டேன். மீண்டும் அவர்களுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. என்னை யார் வசைபாடினாலும் அதற்கு கவலைப்படுபவன் நான் அல்ல. நான் கொள்கைகளுக்காக வாழ்பவன். யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவன் அல்ல. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் மக்களவையிலும், 5 பேர் மாநிலங்களவையிலும் ஓட்டுப்போடாமல் ஓடிப்போனார்களே அவர்கள் என்ன பேரம் பேசி ஓடிப்போனார்கள் என்பதற்கு முதலில் பதில் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நிருபர் ஒருவர் “நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நீங்கள் பேசும்போது பா.ஜனதாவைவிட, காங்கிரஸ் கட்சியை தான் அதிகம் விமர்சித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளாரே?” என்று கேள்வி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வைகோ அரங்கைவிட்டு வெளியேறினார்.