வாக்களிக்கும் தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிடுங்கள்!!!!

சனி நவம்பர் 09, 2019

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை நிறுதிட்டமாகக் கூறமுடியவில்லை.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுக்கும் பொருட்டு,13அம்சக் கோரிக்கைகளுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களைச் சந்திப்பது என்றும் 13 அம்சக்கோரிக்கையை யார் ஏற்றுக் கொள்கின்றனரோ அவரை ஆதரிப்பது என்றும் ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் துடன் பகைக்கக்கூடாது என்பதற்காக விருப்பமற்ற திருமணம் போல, ஐந்து கட்சிகளும் வேண்டா வெறுப்பாகக் கையயழுத்திட்ட கூட்டேயன்றி அதில் உண்மையான ஒற்றுமை இருக்கவில்லை.

உண்மையில் ஐந்து கட்சிகளின் கூட்டில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி யானது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதை உள் நோக்கமாகக் கொண்டிருந்தது.

எனினும் அதனை வெளிக்காட்டாமல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பைத் தாங்களும் ஏற்றுக்கொண்டது போல காட்டாப்புக் காட்டுவதற்காக 13 அம்சக் கோரிக்கையில் ஒப்பமிட்டது.

ஆனால் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர் களை ஐந்து கட்சிகளின் கூட்டணி சந்திக்கவே இல்லை.

மாறாக நாங்கள் அவர்களிடம் போக மாட்டோம். விரும்பினால் அவர்கள் எங்களிடம் வரட்டும் என்று தமிழரசுக் கட்சி கூறியது.

இதனால் 13 அம்சக்கோரிக்கை என்ற விடயம் ஜனாதிபதி வேட்பாளர்களின் கைகளில் கிடைக்காமலேயே நாமே அதைக் கைவிட்ட கதையாக முடிந்தது.

இந்நிலையில் அவர்கள் எங்களிடம் வரட்டும் என்று கூறிய இலங்கைத் தமிழரசுக் கட்சி 13 அம்சக்கோரிக்கை பற்றி எந்தக் கருசனையும் கொள்ளாமல், சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது எனத் தீர்மானித்துள்ளது.

இது அந்தக் கட்சியின் முடிவு.இதுபற்றி நாம் கருத்துரைப்பதைத் தவிர்க்கலாம்.

எம்மைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்ற விடயத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பகிர்ந்தெடுத்து பக்கம் சார்ந்து அறிவிக்காமல்,  

யாருக்கு வாக்களிப்பது என்ற பொறுப்பை தமிழ் மக்களிடம் கையளித்தால் அவர்கள் அதனைச் செம்மையாகச் செய்வார்கள்.

இவ்வாறு செய்வதன்மூலம் அரசியல் பகைமையைத் தவிர்க்க முடியும்.
தவிர, எம்மைப் பொறுத்தவரை தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் மக்களிடம் மிகுந்த அரசியல் ஞானம் உண்டு.

ஆகையால் அவர்கள் தமது வாக்குகள் மூலம் சரியான தீர்ப்பை வழங்குவர்.

நன்றி-வலம்புரி