வாக்கு வங்கியை நோக்கிய எச்சரிக்கைகள்!

சனி மார்ச் 30, 2019

சிங்கள அரசியல் தலைமைகளுடன் கூட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் அவர்களைப் பார்த்து பயமுறுத்தல் எச்சரிக்கை விடுவது ஏன் என்பதை தமிழ்  மக்கள் நன்கு  புரிந்துள்ளனர். தேர்தலை நோக்கிய இந்தப் பயமுறுத்தல் அவர்களின் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு உதவப் போவதில்லை.

ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது எக்காலத்துக்கும் பொருத்தமான பழமொழி.

இலங்கையில் மூன்று தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் வரப்போகின்றன என்பதை அங்குள்ள அரசியல்வாதிகளின் பேச்சுகள் தெரியப்படுத்துகின்றன.

முக்கியமாக, தமிழ்ப்பகுதி அரசியல்வாதிகள் இதில் முந்திவிட்டனர் என்றே சொல்லலாம்.

சிங்களத் தலைமைகளுடன் தங்களுக்குத் தேவையான காலம்வரை கூடிக்குலாவி, தேவையானவற்றையெல்லாம் பின்கதவாலும் முன்கதவாலும் வாங்கிவிட்டு, தேர்தல் வரும்போது தங்களுக்கு வாக்களித்து பதவி பெற்றுக் கொடுத்த மக்களின் தலையில் எண்ணெய் தடவி காதில் பூச்சூட்டுவதில் தமிழ் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.

அந்தக் கைங்கரியமே இப்போதும் நடைபெறுகிறது என்பதற்கு, ஜெனிவாவுக்குப் பின்னரான இவர்களது உரைகள் நல்ல சான்று.

உதாரணமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளின் அண்மைய மூன்று உரைகளுக்கு இலங்கையின் தமிழ் ஊடகங்கள் வழங்கிய பிரதான செய்தித் தலைப்புகளைப் பார்க்கலாம்.

ஜெனிவாவில் இணைஅனுசரணை வழங்கிய தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறினால், சர்வதேச நீதிப்பொறிக்குள் அதனைச் சிக்க வைப்போம் என்று ஜெனிவாவிலிருந்து திரும்பிய கையோடு சுமந்திரன் எச்சரிக்கை செய்தார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் பெற்றுக் கொடுக்க முன்னின்று செயற்பட்ட இவர், அதற்காக பிரித்தானிய அரசுக்கு நன்றி கூறியதை மறக்க முடியாது.

இப்படியெல்லாம் தலைகரணமாகச் செய்துவிட்டு, இலங்கை திரும்பியதும் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுவது ஆத்மசுத்தியானதல்ல.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது பின்வருமாறு சொன்னார்.

ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் புறந்தள்ளுமானால் விளைவு மிகப் பாரதூரமானதாக அமையுமென்பது இவரது எச்சரிக்கை.

அந்தப் பாரதூரமான விளைவு எத்தகையானதாக அமையுமென்று இவர் கூறவில்லை. 1950களில் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த சப்பாணிப் போராட்டமாகவே அது இருக்கலாம் போலும்.

சிலவேளை எச்சரிக்கை விடுத்த சம்பந்தனுக்கே என்ன செய்யப் போகிறோமென்று தெரியாதிருக்கலாம்.

கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக விளங்கும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவும் தம்பங்குக்கு முழங்கியிருக்கிறார்.

வலிகாமம் வடக்கின் புனித பிரதேசங்களை என்ன விலை கொடுத்தும் காப்பாற்றுவோம் என்று கடுஞ்சீற்றத்துடன் இவர் சொன்னதாக ஊடகச் செய்தியொன்று தெரிவிக்கிறது.

என்ன விலை கொடுத்தும் என்ற சொற்பதமானது உயிரைக் கொடுத்தும் காப்போம் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தத்துடன்தான் மாவை இதைச் சொன்னாரா என்பதை அவரே விளக்க வேண்டும்.

இவரது சொந்தப் பிரதேசமான வலிகாமம் வடக்கில் மட்டும்தான் புனித பிரதேசங்களை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ளதா? வடக்கு கிழக்கு முழுவதும்தானே இந்த நிலைமை. அப்படியிருக்க எதற்காக வலிகாமம் வடக்குக்கு மட்டும் என்ன விலை கொடுத்தும் காப்பாற்றுவோமென தமிழ் மக்களின் தலைமைக் கட்சியை சேர்ந்தவர் சொல்வது?

கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நாவற்குழியில் மகாவிகாரையொன்று எழுந்து கொண்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மாவையின் பதிலென்ன?

மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக மாவைக்குச் சொந்தமான சொல்லாடல். அதைத்தான் இப்போதும் அவர் சொல்கிறார் போலும்.

கூட்டமைப்பின் மும்மூர்த்திகளினதும் பயமுறுத்தல் கலந்த எச்சரிக்கைக்கு தெற்கு எவ்வாறு பதிலளித்துள்ளது என்று பார்ப்பது அவசியம்.

இலங்கை என்ன செய்ய வேண்டுமென்பதை சர்வதேசம் உத்தரவிட முடியாதென மைத்திரியின் வலக்கரமாக இயங்கும் வடக்கின் ஆளுனர் சுரேன் ராகவன் அடித்தாற்போல பதிலளித்துள்ளார்.

பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த உட்பட அனைத்து சிங்களத் தலைமைகளும் இதனையே கூறிவருகின்றன.

தமக்குத் தெரியாமலே ஜெனிவாவிலுள்ள இலங்கையின் பிரதிநிதி புதிய பிரேரணையில் ஒப்பமிட்டதாக எவரும் நம்ப முடியாத பச்சைப் பொய்யை மைத்திரி கூற ஆரம்பித்துள்ளார்.

இலங்கைக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜெனிவா சென்ற மலிக் சமர விக்கிரம அங்கு உரையாற்றுகையில் கலப்பு நீதிப் பொறிமுறையை ஏற்க முடியாதென பகிரங்கமாகத் தெரிவித்தார்.

கலப்பு நீதிப் பொறிமுறையை கூட்டமைப்பு தொடர்ந்து கேட்டு வந்தால், மீண்டும் ஒரு கறுப்பு யூலை உருவாகுமென்று மைத்திரியின் சுதந்திர கட்சிப் பிரமுகரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இனவாதம் கக்கியுள்ளார்.

இது போதும் இனவாதிகளான சிங்களவர்களுக்கு மீண்டும் கத்தியும் பொல்லும் அரிவாளும் துவக்கும் தூக்குவதற்கு.

தமிழ் மக்களுடன் அரசாங்கம் யுத்தம் புரியவில்லை. புலிகளுடன்தான் யுத்தம் புரிந்தோம் என்று மீள மீளக் கூறும் சிங்கள அரச தரப்பு, மீண்டும் கறுப்பு யூலையைக் காட்டி பயமுறுத்துகின்றது என்றால், தமிழ் மக்களைக் கொன்று குவிப்போமென்றுதானே அர்த்தம்.

இது சம்பந்தமாக அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவிதமான மறுப்பும் இதுவரை வரவில்லையென்றால் அரசாங்கமும் இதனையே விரும்புகிறது போலும்.

இந்தப் பயமுறுத்தலுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ யாழ்ப்பாணத்தில் வைத்து பதிலளித்துள்ளது.

அப்படியொரு கறுப்பு யூலை மீண்டும் வருமென்றால் இலங்கை இரண்டாக உடையும் என்று ரெலோவின் செயலாளர் சிறீகாந்தன் பதில் பயமுறுத்தல் கொடுத்துள்ளார்.

பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் நாம் தீர்வு கேட்கிறோமென்று திரும்பத் திரும்ப வாய்ப்பாடு வாசிக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஒருபோதும் இலங்கை பிளவுபட அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் ரெலோ அமைப்பு கோமாளித்தனமாக இப்படிக் கூறக்கூடாது.

கூட்டமைப்பின் எச்சரிக்கை உரைகளுக்கு ஒரு வரியில் பதிலளித்துள்ள சிங்கள இனவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பினர் புலி வேசம் போட்டு ஆடுகிறார்கள் என்று கேலி பண்ணியுள்ளார்.

கூட்டமைப்பினர் புலியாட்டம் ஆடுகின்றனர் என்று சொல்லாமல், புலி வேசம் போட்டு ஆடுகின்றனர் என்பது கூட்டமைப்பினரின் வசதிக்கேற்ற வேசத்தைப் புட்டு வைத்துள்ளது.

தமிழ் மக்களினதும் அவர்கள் மண்ணினதும் காவலர்களாகவிருந்த தூய்மையான ஒரு இயக்கத்தின் பெயரை களங்கப்படுத்துமளவுக்கு கூட்டமைப்பினரின் ஆட்டம் அமையக்கூடாது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க கூட்டமைப்பினர் சிலவேளை தங்களை புலிகளின் மறுவடிவமாகக் காட்டவும் எத்தனிக்கலாம்.

தேர்தலில் மீண்டும் தங்கள் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு தமிழ் மக்களை பகடைக்காய்களாக வைக்கவும் கூட்டமைப்பு தயங்காது.

மக்களுக்காக அரசியல் அமைய வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் இருப்புக்காக மக்கள் ஆட முடியாதென்பதை புரிந்து கொள்ளும் காலம் தேர்தல் காலமே.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் இதனை நன்றாகப் புரிந்து கொண்டே தங்கள் போராட்டங்களை தாங்களாகவே முன்னெடுத்து வருகிறார்கள்.

மக்கள் மேல் சவாரிவிட முனையும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் தமிழ் மண் இனி இடம் கொடாது. 

பனங்காட்டான்