வாக்குறுதியிலிருந்து சிறிலங்கா பின்வாங்கியுள்ளது

திங்கள் ஜூன் 22, 2020

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பதிலிருந்து சிறிலங்கா  விலகிச்சென்றுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பான 2019 வருடாந்த அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

புதிய ஜனாதிபதியும் அவரது இடைக்கால அரசாங்கமும் எடுத்த முக்கியமான கொள்கை தீர்மானங்களில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில்லை என்பதே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உத்தேச புதிய சட்டமூலத்தையும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 ஜிஎஸ்பி சலுகையை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின் போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடமும் முன்வைக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது என்பது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2015 ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு முன்னேற்றமே ஏற்பட்டது என அந்த அறிக்கையில் ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது.