வாலிபரை விரட்டிச்சென்று மிதித்து கொன்ற யானை-ஈரோடு மாவட்டம்

செவ்வாய் ஓகஸ்ட் 06, 2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட விளாமுண்டி, பவானிசாகர் வனப்பகுதியில் புலி,சிறுத்தை,யானை, மான், கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது.

தற்போது வனப்பகுதியில் உள்ள மரம் மற்றும் செடி–கொடிகள் காய்ந்து கருகி வருகின்றன. குறிப்பாக வனக்குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.

இதில் யானைகள் மட்டும் அடிக்கடி கிராமப்பகுதிக்குள் புகுந்து வாழை,கரும்பு,மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை பவானிசாகர் அருகே நால்ரோட்டில் உள்ள புதர்மறைவில் நின்றது. யானை நிற்பதை கவனிக்காமல் அந்த வழியாக 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் நடந்து சென்றார்.

அப்போது திடீரென அந்த யானை, மூதாட்டியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதனை கவனித்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், யானையை விரட்ட முயற்சி செய்ததோடு மூதாட்டியை மீட்க முயன்றனர்.

இதனால் ஆவேசமடைந்த யானை பொதுமக்களையும் விரட்டியது.

இதன்காரணமாக அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதில் பவானிசாகர் நால்ரோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான உதயகுமார் (வயது 29) என்பவர் மட்டும் வனப்பகுதிக்குள் ஓடி உள்ளார்.

இதனால் அந்த யானை,அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியதோடு,உதயகுமாரின் கால் மற்றும் தலையில் மிதித்து நசுக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்ததோடு மயங்கினார்.

பின்னர் அந்த யானை அங்கே சுற்றித்திரிந்தது.

இதனால் பொதுமக்கள் இதுகுறித்து பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பட்டாசுகள் வெடித்தும் தீப்பந்தங்கள் காட்டியும் அந்த யானையை காட்டுக்குள் விரட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் படுகாயம் அடைந்த உதயகுமார் மற்றும் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே உதயகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யானை மிதித்து வாலிபர் ஒருவர் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.