வாழ்வில் ஒளியேற்றும் திருக்கார்த்திகை திருநாள்

ஞாயிறு நவம்பர் 29, 2020

சிவபெருமான், ஜோதி வடிவமாக அடி முடி காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து ஒளிர்ந்து நின்ற நாளே, திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று சொல்லப்படுகிறது.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் இயற்கை சக்திகளை, பஞ்ச பூதங்கள் என்று குறிப்பிட்டு வணங்கும் நடைமுறை கொண்டது நம் தொன்மை நாகரிகம். பிற்காலத்தில் இவற்றை கடவுளாக வடித்து அதற்கெனத் தனித்தனி ஆலயங்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி நீரின் அதிபதியாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரும், நிலத்தின் அதிபதியாக திருவாரூர் தியாகேசரும் (காஞ்சி ஏகாம் பரேஸ்வரரையும் கூறுவதுண்டு), காற்றின் அதிபதியாக திருக்காளஹஸ்தி காளத்திநாதரும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜபெருமானும், நெருப்பின் அதிபதியாக திருவண்ணாமலை அண்ணாமலையாரும் போற்றி வணங்கப்படுகிறார்கள்.

மகா விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சிவபெருமான், ஜோதி வடிவமாக அடி முடி காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து ஒளிர்ந்து நின்ற நாளே, திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதையும் பார்ப்போம்.

ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை தன் கைகளைக் கொண்டு மூடினாள். அடுத்த நொடி அண்டசராசரங்கள் அனைத்தும் இருளில் மூழ்கியது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் தவித்தன. இதனைக் கண்டு ஈசன் கோபம் அடைந்தார். தன்னுடைய செய்கையால், உலக உயிர்கள் துன்பம் அடைந்ததையும், அதைக்கண்டு சிவபெருமான் கோபித்ததையும் பார்த்து, பார்வதிதேவி தன் தவறை உணர்ந்தாள். பின்னர் தன் தவறுக்கு மன்னிப்பு கோரினாள். இதையடுத்து சிவபெருமான், பார்வதிதேவியை மன்னித்து அவளுக்கு தன்னுடைய உடலில் இடப் பாகத்தை அளித்து ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவத்தில் காட்சியளித்தார். இருண்ட உலகத்திற்கு ஒளியூட்டிய நாளைப் போற்றும் விதமாகவே, உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆலயங்களில் இறைவன் குடிகொண்டிருக்கும் இடத்தை ‘கருவறை’ என்று அழைக் கிறோம். கருவறை என்பது வெளிச்சம் படாத இடம். உலகெங்கும் நிறைந்துள்ள இறைவன் கண்ணுக்குத் தெரியாத பரம்பொருள் என்பதை நினைவு கூர்வதற்காகவே, கருவறையில் அவரை பிரதிஷ்டை செய்தனர் நம் முன்னோர்கள். கற்பூரதீபம் காட்டும்போது கருவறை என்னும் இருளறையில் சிலையாய் நாம் பிரதிஷ்டை செய்த இறைவனின் திருவுருவம் நம் கண்களுக்கு முழுமையாக காட்சியளிக்கிறது. தீபத்தை ஏற்றி மனதில் இருக்கும் இருளை விலக்கி வழிபட்டால், உலகெங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் தரிசனம் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே, தீபமேற்றி வழிபடும் வழக்கம் உருவானது.

தீபத்தில் இறைவனை காண்பது முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்றுதொட்டுவரும் நடைமுறையாகும். இவ்வுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் சூரிய ஒளியே தருகிறது. ஒளியான தீப வெளிச்சமே அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு அறிவு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பலப்படுத்துகிறது. மேலும் எரியும் விளக்கை கவிழ்த்தாலும் அதிலிருந்து சுடர்விடுகின்ற தீபம் எப்பொழுதும் மேல்நோக்கியே இருக்கும். அதுபோல வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் வாழ்க்கை பாடமாகும்.

 

இத்தகைய சிறப்புமிக்க கார்த்திகை தீபத் திருநாள் அன்று, நம் வாழ்வில் ஒளியேற்றம் உண்டாக அனைவரும் ஜோதி வடிவான சிவபெருமானை வழிபட வேண்டியது அவசியமானதாகும். அதோடு கார்த்திகை திருநாள் அன்று, வீடுகள் தோறும் விளக்கேற்றி வைத்து ஒளியை போற்றி வழிபடுவோம்.