வாராந்த புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்படவில்லை

வியாழன் செப்டம்பர் 24, 2020

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த காலத்தில் நான் தேசிய புலனாய்வுச் சேவைக்கு (எஸ்ஐஎஸ்) எந்த ஒரு வாராந்த புலனாய்வு அறிகையையும் வழங்கவில்லை” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ண தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் செப்டெம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற விசாரணையில் சாட்சியமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“18 வாராந்த புலனாய்வு அறிக்கைகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் நான் அறிக்கையைப் பதிவு செய்யும்போது காண்பித்தேன். எனது பதவிக்காலத்தில் 3 புலனாய்வு அறிக்கைகளில் மட்டுமே கையெழுத்திட்டிருந்தேன். அந்த 3 அறிக்கைகளும் தேவையான நடவடிக்கைகளுக்காக தேசிய புலனாய்வகத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்தன” என்றார்.

எவ்வாறாயினும் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவா்தன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலர் வைத்தியரட்ண 40 வாராந்த புலனாய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்ததாக முன்னர் தெரிவித்திருந்தார்.

இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்து வைத்திருந்தாகவோ அல்லது எங்காவது களஞ்சியப்படுத்தி வைத்திருந்ததாகவோ எவ்வித தகவலையும் தான் பெறவில்லை என வைத்தியரட்ண மேலும் தெரிவித்தார்.