வாறாய் நீ வாறாய்... (மீண்டும்) போகுமிடம் வெகு தூரமில்லை...

புதன் நவம்பர் 13, 2019

தமிழர்களைப் படுகுழிக்குள் தள்ளுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் களத்தில் இறங்கிவிட்டது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் சிறீலங்கா ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13 கோரிக்கைகளை ஏற்று ஐந்து கட்சிகள் உடன்படிக்கையில் கையயாப்பமிட்டன.

இந்தக் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்கள் இதனை ஏற்கின்ற பட்சத்தில் தான் அவர்களுக்கு ஆதரவை வழங்குவதென்றும், இல்லாது போகின்ற பட்சத்தில் அனைவரும் இணைந்த வேறுமுறையான அணுகுமுறையை முன்வைப்பதாகவும் ஏற்றுக்கொண்டு தான் இதில் ஐந்து கட்சிகள் கையயழுத்திட்டிருந்தன.

ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒரே மேசைக்கு அழைத்து வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த இந்த முயற்சியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த ஒப்பந்த்தில் கையயாப்பமிடாது விலகியதுடன், தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கியது.

ஒற்றுமையாக இருந்து தமிழர்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முனையாமல் வெளியேறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இதற்காக பலரும் அன்று வசைபாடினர். இன்று வாயடைத்துப்போயுள்ளனர்.

உடன்படிக்கையின் பின்னர், ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்தே சிறீலங்கா ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பது என்றும், எந்த முடிவாக இருந்தாலும் ஐந்து கட்சிகளும் கூடியே முடிவெடுப்பதென்றும் தீர்மானித்தனர்.

ஆனால் உடன்படிக்கை செய்துகொண்ட ஓரிரு நாட்களிலேயே ஒவ்வொரு கட்சியும் தங்கள் தங்கள் வேசத்தைக் கலைக்கத் தொடங்கின. இறுதியில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அல்வா கொடுத்து
விட்டு தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப்வும், ரெலோவும் அவர்கள் வழியில் பின் சென்றுள்ளனர்.

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13 கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்காமல் மாணவர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையுமே இந்த ஐந்து கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இந்த ஐந்து கட்சிகளும் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து கூட்டு முயற்சியையும் குழப்பியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன், தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய தாங்கள் எடுத்த இந்த முயற்சியை தத்தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாகவும், இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில் படுக்கும் அதன் குணத்தை மாற்றமுடியாது.

சுற்றிச் சுற்றி கடைசியில் சுப்பரின்ரை படலைக்குள்ளை என்ற கதையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசியில் எங்கு வந்து நிற்கும் என்பது உலகறிந்த இரகசியம். இந்த இரகசியம் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புரியாமல்போனதுதான் ஆச்சரியம்.

2015ம் ஆண்டு சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலில் எந்த வித நிபந்தனையும் இல்லாமல்தான் மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தமையால்தான் சிங்கள - தமிழ் மக்கள் சேர்ந்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதி என்று கற்பிதம்கொண்டு, அந்த ஆட்சியை இந்த உலகம் நல்லிணக்க அரசின் ஆட்சி என்று மகுடம் சூட்டியது.

அந்த ஆட்சியை அப்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்திருந்தால் அவ்வாறான ஒரு மகுடத்தை இந்த உலகத்தால் சூட்டியிருக்கமுடியாது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலும் இத்தனை ஆண்டுகள் கால நீடிப்பையும் வாங்கிக்கொடுத்திருக்க முடியாது.

மைத்திரிபால சிறீசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்து தமிழ் மக்கள் கண்ட பயன் எதுவுமில்லை. காணாமல்போனவர்களின் போராட்டம் 1000 நாட்களை எட்டவுள்ளது, நிலமீட்புப் போராட்டம் இன்னும் தொடர்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலையின்றி இன்னும் சிறையில் வாடுகின்றார்கள். தமிழர் தாயகமெங்கும் பெளத்த மயமாக்கப்பட்டு, தமிழர்களின் ஆலயங்களும் பண்பாட்டு இடங்களும் பறிபோகும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

இதுதான் தமிழர் கண்ட நிலை ஆனால், நிபந்தனையின்றி ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மகுடத்துடன் அரியாசனம் ஏறியது. மைத்திரியின் அரசாங்கத்தை அடிக்கடி நம்பிக்கை இல்லாப் பிரேரணைகளில் இருந்து பாதுகாத்து பல சலுகைகளைப் பெற்றுக்கொண்டது.

தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு, அந்தத் தமிழ் மக்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இனத்தை அழித்த சிறீலங்காப் படையினரினதும், காவல்துறையினரினதும் பாதுகாப்பையும் பெற்றுக்கொண்டது.

இவ்வாறு கூட்டமைப்பு அடைந்த இலாபங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போது சஜித் பிறேமதாசவை ஆதரிப்பதாகக் கூறி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதுவும், கடந்தமுறை போன்றே எந்தவொரு நிபந்தனையுடனும் ஆதரவு வழங்கவில்லை என்றும், அவருடைய கொள்கைப் பிரகடனத்தை ஆராய்ந்த பின்னரே ஆதரவு வழங்க முடிவு எடுத்ததாகவும் கூறியுள்ளது.

ஏற்கனவே, எந்தவித நிபத்தனையுமின்றி ஆதரவு வழங்கி தமிழர் தாயகத்தை சிங்கள, பெளத்த மயமாக்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்த கூட்டமைப்பு, இப்போது மீண்டும் அதே கூட்டத்தை ஆட்சிக்கு கொண்டுவந்து எஞ்சியிருக்கும் தமிழர் தாயகத்தையும் கபளீகரம் செய்ய வழி ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

‘மந்திரிக் குமாரி’ திரைப்படத்தில் தன் மனைவியைக் கொல்வதற்கு திட்டம்போட்டு ‘வாறாய் நீ வாறாய்... போகு
மிடம் வெகு தூரமில்லை...’ என்று மலையுச்சிக்கு கணவன் அழைத்துச் செல்வதுபோன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதை நோக்கி அழைத்துச் செல்லத்துணிந்துள்ளது.

மலையுச்சியில் கணவனுக்கு கிடைத்த தக்கபாடம்போல், கூட்டமைப்பிற்கும் பாடம் படிப்பிக்க தமிழ் மக்கள் ஏற்கனவே தங்கள் பாதணிகளைக் கழற்றிவிட்டார்கள்.

சிறீலங்காவின் ஜனாதிபதியாக இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களான கோத்தபாய ராஜபக்சவோ, சஜித் பிறேமதாசாவோதான் வெற்றி பெற்று ஆட்சிக் கதிரையில் அமரப்போகின்றார்கள்.

இவர்கள் இருவருமே தமிழ் மக்களின் உரிமைகளையோ, அபிலாசைகளையோ கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்களை தமிழ் மக்கள் ஆதரிப்பது என்பதும், இவர்களை ஆதரிக்குமாறு தூண்டுவதும் இனத்தின் விடுதலைக்காக வீழ்ந்த அந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாகவே இருக்கும்.    

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு