வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும்!

ஞாயிறு நவம்பர் 03, 2019

வாரிசு இருப்பவர்களே அரசியலுக்கு வர முடியும். வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது என்று திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

தமிழகத்தில் 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்றோம். அப்போது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்டத்தின்படி முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது.

ஒரு பக்கம் வைதீக திருமணங்களும், இன்னொரு பக்கம் சீர்திருத்த திருமணங்களும் நடந்து வருகிறது. வைதீக திருமணத்தை விமர்சிக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. ஆனால் சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், சொல்லடியும் பட்டார்.

தான் சொல்லக்கூடிய கருத்தால் பிறர் மனம் புண்படுமா என்று யோசிக்காமல் அதை ஆணித்தரமாக சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் பெரியார். ஆனால் அவருடைய கருத்து மற்றும் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போன்று அந்த கருத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்து சொன்னவர் அண்ணா.

காஞ்சிபுரத்தில் பகுத்தறிவு கருத்துக்களை எடுத்து சொன்னபோது, தந்தை பெரியாரை அந்த மேடையில் கல்வீசி தாக்கினார்கள். அவருடைய நெற்றிப் பொட்டில் இருந்து ரத்தம் வழிந்தது. பாதியில் கூட்டத்தை முடித்துக்கொண்டார். இதையறிந்த அண்ணா, அதே மேடையில் பெரியாரை உட்கார வைத்துக்கொண்டு அவர் சொன்ன கருத்தினை நாடகம் வாயிலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.

இன்றைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நம்மிடம்தான் இருக்கிறார்கள். அண்ணா, பெரியாரின் மொத்த உருவம்தான் கலைஞர். இப்போதும் நமது ஊன், உதிரம், உயிர் ஆகியவற்றில் இந்த மூன்று தலைவர்களும் கலந்திருக்கிறார்கள். ஆகவே எந்த ஆதிக்க சக்தியும் தமிழகத்தில் வரமுடியாது. என்னைப்பற்றி விமர்சிக்காதது உண்டா? என்னென்னமோ குறைகள் எல்லாம் சொன்னார்கள். வாரிசுகள் இருப்பவர்கள்தான் வாரிசு தாரர்களாக வரமுடியும். வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது.

தி.மு.க.வில் எப்படியாவது கலகத்தை, குழப்பத்தை ஏற்படுத்தி இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்பது தான் வரலாறு.

இன்றைக்கு நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் எப்படிப்பட்ட ஊழல் செய்திருக்கிறார் என்பது தெரியுமா? குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்றே அவருக்கு பட்டம் சூட்டினார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை என்றால் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிக்க வேண்டும். ஆனால் மக்களை கொடுமைக்கு ஆளாக்கும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி நடக்கிறது.

கேன்சரை வரவழைக்கும் குட்காவிற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இன்று பெட்டிக்கடை, டீக் கடை, நடைபாதை, பள்ளி, கல்லூரிகள் முன்பு மாமூல் வாங்கிக்கொண்டு குட்கா விற்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அதில் ஒரு ஆவணம் சிக்கியது.

அதில் மாதந்தோறும் யார், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது என்ற பட்டியல் இருந்தது. அதில் முதல் பெயராக அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை காவல் துறை  கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருந்தன.

இந்த பட்டியலை நான் சொல்லவில்லை. வருமான வரித்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கொடுத்துள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதேபோன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியது.

இதையும் தி.மு.க.காரன் எடுக்கவில்லை. அதையும் வருமான வரித்துறைதான் எடுத்தது. இந்த வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

ஈரோட்டில் பிரபலமான காண்டிராக்டர் அசோக்குமாருக்கு சொந்தமான அன்னை இன்பரா நிறுவனம் ரூ.450 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அவருக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உள்ளது. இது எனக்கு தெரியும்.

ஆனால் அதை நான் இப்போது சொன்னால் பாதகமாக போய்விடலாம். விரைவில் அந்த உண்மை வெளிவரும். தமிழகத்தில் நடைபெற்று வரும் அக்கிரம, அநியாயமான, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி மிக விரைவில் முடியப்போகிறது. அண்மையில் நடைபெற்ற 2 சட்டமன்றதொகுதி இடைத் தேர்தல்களில் எப்படி அ.தி.மு.க. வெற்றி பெற்றது என்பது நாட்டு மக்களுக்கும், உலகிற்கும் தெரியும்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல் படுத்துவோம்.

கலெக்சன், கரப்சன், கமிஷன் ஆகிய முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மக்கள் முன்பு அடையாளம் காட்டி உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.