வாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?

வியாழன் நவம்பர் 14, 2019

வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது.

வேகமாக பரவும் குறுந்தகவல்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.

ஆய்வில் வைரலாகும் குறுந்தகவல் முற்றிலும் போலி என தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்ற குறுந்தகவல் ஏற்கனவே பகிரப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேர்க்கப்பட்டு இருப்பதால் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. வலைத்தளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் வைரல் குறுந்தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.