வேலையில்லாப்பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

திங்கள் செப்டம்பர் 16, 2019

அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக்கோரி ஒன்றிணைந்த வேலையில்லாபட்டதாரிகள்   சங்கத்தினர் இன்று கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன்பாக ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை  நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது உள்வாரி, வெளிவாரி என்ற பேதம்  வேண்டாம், பட்டப்படிப்பிற்கு தகுந்த வேலை வேண்டும்,   ஏமாற்றாதே வேலைவாய்ப்பைக்கொடு என்ற சுலோலங்களை  ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டகாரர்கள்  பேரணியாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சை  நோக்கி சென்றனர்.  

இதன்போது லோட்டஸ் சுற்றுவட்டப்பாதைக்கு அண்மையில்  பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்ட  காரர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர்.இருப்பினும் அவர்களில் ஆறு  பேருக்கு அமைச்சுக்கு சென்று அமைச்சின் செயலாளருடன்  கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான  வாய்ப்பு  ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் ஒன்றிணைந்தவேலையில்லா பட்டதாரிகள்  சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரரிடம்  வினவியபோது,  

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின்  செயலாளரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு  எமக்கு  ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. இதன்போது, நாளை தினம்    இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படும் அதேவேளை எமது கோரிக்கைகளுக்கு  தகுந்த  தீர்வு  பெற்றுக்கொடுக்கப்படும்என்ற  வாக்குறுதி  அளிக்கப்பட்டது என்றார்.