வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாய தலைவர்களை கொல்ல சதி!

சனி சனவரி 23, 2021

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை கொல்லவும், உழவு இயந்திர பேரணியை சீர்குலைக்கவும் சதி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி மற்றும் அதன் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி டெல்லியை நோக்கி பிரமாண்ட உழவு இயந்திர பேரணியை நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாய அமைப்பின் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தங்களது அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டனர்.

மேலும் அதற்கு ஆதாரமாக போராட்டம் நடக்கும் பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த நபரையும் பத்திரிகையாளர்கள் முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது உழவு இயந்திர பேரணி நடக்கும்போது காவல்துறையினர் போல உடையணிந்து, விவசாயிகள் மீது தடியடி நடத்த தங்களது கூட்டாளிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த நபர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த நபரை விவசாய தலைவர்கள் ஹரியானா மாநில காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விவசாய தலைவர்களின் குற்றச்சாட்டால் போராடி வரும் விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.