வெளியேறும் அமெரிக்க படையினர் மீது குர்திஸ் மக்கள் தக்காளி உருளைக்கிழங்கு வீச்சு!

செவ்வாய் அக்டோபர் 22, 2019

வடசிரியாவில் உள்ள குர்திஸ் பகுதிகளில் இருந்து வெளியேறும் அமெரிக்க படையினர் மீது குர்திஸ் மக்கள் தக்காளி உருளைக்கிழங்குபோன்றவற்றை எறிந்துள்ளனர்.
 
குவாமிஸ்லி நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும் அமெரிக்க படையினர் மீது சீற்றமடைந்த குர்திஸ் மக்கள் தக்காளிகளையும் உருளைக்கிழங்கையும் வீசி எறிவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

பொதுமக்களில் சிலர் அமெரிக்கா பொய் சொல்லும் நாடு அமெரிக்கா வேண்டாம் என கூக்குரலிடுவதை வீடியோவில் கேட்க முடிகின்றது.

அமெரிக்கா எலிகளை போல பயந்து ஓடுகின்றது என ஒருவர் கூச்சலிடுவதையும் ஏனையவர்கள் அமெரிக்கா குறித்து தகாத வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதையும் சிலர் துருக்கியின் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகள் குறித்து தெரிவிப்பதையும் வீடியோவில் அவதானிக்க முடிகின்றது.

வடசிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படையினர் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவினால் வெளியேறுவதை தொடர்ந்தே குர்திஸ் மக்கள் தமது சீற்றத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.