வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு இயந்திரம் சுறு சுறுப்பாக செயல்படவில்லை: பழ.நெடுமாறன்

வெள்ளி நவம்பர் 13, 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை பார்வையிட்ட தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்,'ஏரிகள், குளங்கள் தூர் வாரியிருந்தால் கடலில் கலக்கும் ஏராளமான நீரை சேமித்து சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கும் இந்த சேதத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,'தமிழ்நாட்டில் வரலாறு இல்லாத அளவில் பெரும் மழை பெய்துள்ளது. அநேகமாக வடக்கு மாவட்டங்கள் மற்றும் குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி சென்றடையவில்லை. மருத்துவ உதவிகள் கிராமப்புறங்களுக்கு போய் சேர வேண்டும். இல்லாவிடில் தொற்றுநோய் ஏற்பட்டு மேலும் பலர் இறக்க நேரிடும். வேளாண்மை பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுப்பை தொடங்கவில்லை. கணக்கெடுப்பு எடுத்தால்தான் இழப்பீடு வழங்க முடியும்.

வெள்ளச் சேதத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் முக்கிய காரணம். வீராணம்ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தூர்வாரியிருந்தால் ஏராளமான நீரை சேமித்திருக்கலாம். சேதத்தையும் தவிர்த்திருக்கலாம். வீராணம்ஏரி தூர் வார ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. வீராணம்ஏரியின் வடிகால் வாய்க்காலான வெள்ளியங்கால்ஓடை சரியாக தூர்வாரப்பட்டிருந்தால் சேதம் ஏற்பட்டிருக்காது. சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்ள அரசு மருத்துவமனைகள் சிறிய அளவில் உள்ளது. இதனை அரசு விரிவாக்கம் செய்ய வேண்டும். அவசர உதவிகள் இந்த மருத்துவமனைகளில் அளிக்க முடியாததால், கடலூருக்கு செல்லும் நிலை உள்ளது. வெள்ளத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. அவைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துள்ளன. 30-க்கும் மேற்பட்ட படகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் சேதமடைந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதுகுறித்து அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மட்டுமல்லாமல் இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டும்.

சிதம்பரம் அருகே உதவி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கையை அரசு நிறுத்த வேண்டும். அரசு இயந்திரம் சுறு, சுறுப்பாக இயங்கவில்லை. சேதத்திற்கு காரணம் அரசின் திட்டமிடுதலில் உள்ள குறைபாடுகள்தான் காரணம். தொலைநோக்கு பார்வையில் அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை. எனவே தமிழகஅரசு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார் பழ.நெடுமாறன்.