வேலூர் தேர்தல் ரத்து ; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

புதன் ஏப்ரல் 17, 2019

வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலை ரத்து செய்ய, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தின் வேலூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க சார்பில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அ.ம.மு.க சார்பில் பாண்டுரங்கன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, துரைமுருகன் வீடு, அவருடைய மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இன்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தி, 11.53 கோடி ரூபாயை கைப்பற்றினர்.

இதுகுறித்து, தேர்தல் கமிஷன் சார்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக நேற்று (15 ஆம் திகதி) இரவு செய்தி பரவியது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் (16 ஆம் திகதி) காலை அளித்த விளக்கத்தில், 'இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை' என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் (16ம் தேதி) இரவு, வேலூர் லோக்சபா தொகுதியின் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கிடையில், "வேலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் நடக்கும்" என, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கூறியதாவது:

"வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கை. மோடி ஆட்சியை வீழ்த்தும் தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

"வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தலை ரத்து செய்திருப்பதன் மூலம், தேர்தல் கமிஷன் நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது. இந்த விஷயத்தில், தேர்தல் கமிஷன் அவசரப்படாமல் விசாரணை நடத்தி முடிவுக்கு வந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.