வெற்னா மாநாட்டில் ஈழவர் குரல்கள்!

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட இச் சங்கமானது முதலில் ஐந்து தமிழ் அமைப்புகளால் 1987 இல் நிறுவப்பட்டது.
அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை அது உள்வாங்கி, அவற்றையும் அதில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆண்டுதோறும் வட அமெரிக்காவின் வெவ்வேறு மாநகரங்களில் ஜூலை மாதத்தில் பிரமாண்டமான தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது. இதற்காக உலகமடங்கிலுமிருந்து துறைசார் ஆளுமைகள் விசேடவிருந்தினர்களாக அழைக்கப் படுகின்றார்கள்.
தமிழ் எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள்,எனப் பல ஆளுமைகளின் சங்கமம் இது.
இம்முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த பிரமாண்ட மகாநாட்டில் கனடாவில் அமைய இருக்கும் தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபி காட்சிப்படுத்துவதற்கு சிறப்புச் சாவடி ஒன்று ஒதுக்கப்பட்டுச் சிறப்பளிக்கப் பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப லட்சம் ஈழத் தமிழரை நினைவு கூர்வதற்கான நினைவுத் தூபி பிரம்ரனில் உருவாகவுள்ளது.
வெற்னா மகாநாட்டின் மணி மகுடமாக விளங்குகின்ற பன்னாட்டுத் தமிழர் கருத்தாடல் நேரம் (world Tamil hour) எனப்படுகின்ற துறைசார் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளுகின்ற அந்த மாபெரும் உரைவீச்சு நிகழ்வில் ஈழ இன அழிப்பின் காணொளி ஒளிபரப்பப் பட்டது. அதில் தொடர்ந்து நினைவுத் தூபியின் அவசியம் தொடர்பாகவும், தமிழ்க் குழுமங்கள் அதனை அமைக்கும் பணிக்கு எவ்வாறு உதவிடலாம் என்பது தொடர்பாகவும் அமலீதன் அவர்கள் உரையாற்றினார்கள்.
மேலும் இலங்கை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் வேலன் சுவாமி, கத்தோலி்க்க திருச்சபையின் பேராயர் ஆண்டகை Christian Noel Emmanuel, தமிழக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சமூக நீதிப் போராளியுமான தொல். திருமாவளவன், பலர் தங்களின் அரிய உரைகளை அங்கு நிகழ்த்தினார்கள்.