வெற்றுச் சோறு ரசத்துக்குத் தகராறு - பிலாவடி மூலைப் பெருமான்

புதன் ஏப்ரல் 17, 2019

இதென்னடா, கிழவன் பெரிய தகராறு செய்யிறதுக்கு வந்திருக்கிறான் என்று தலைப்பைப் பார்த்துப் போட்டு நீங்கள் முழி பிதுங்கி நிற்கிறது எனக்கு விளங்குது. ஒன்று கேட்கிறேன் பிள்ளையள், இந்தக் கிழட்டு வயதில் தகராறு செய்கிற நிலையிலையே நான் இருக்கிறேன்? ஆனாலும் பாருங்கோ இஞ்சை வெளிநாட்டிலை திரிகிற சில வெற்றுச் சோறுகள் செய்கிற கூத்துகள் ரசத்துக்குத் தகராறு செய்யிற மாதிரித்தான் இருக்குது.

நான் வெற்றுச் சோறு என்று சொல்கிறது இஞ்சை புலம்பெயர் தேசங்களில் திரிகிற சில வெற்று வேட்டுக்களைத் தான். அதுவும் உந்தக் கிரகம் கடந்த தமிழீழ அரசாங்கத்திலை அமைச்சராக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிகிற அலுக்கோசுகளைத் தான் சொல்கிறேன்.

இப்பிடித் தான் கொஞ்சக் காலத்துக்கு முதல் கனடாவில் ஒரு பகிடி நடந்தது. அங்கையிருக்கிற ஆங்கிலப் பத்திரிகை நிறுவனம் ஒன்றிற்கு இரண்டு தமிழ் ஆட்கள் போயிருக்கீனம். வலு கலாதியாக கோட், சூட், ரை எல்லாம் போட்டுக் கொண்டு போய் வாசலில் நின்ற வரவேற்பாளரிடம் கேட்டிருக்கீனம், தாங்கள் எடிட்டரை சந்திக்க வேண்டும் என்று. அவையின்ரை கெட்ட காலமோ, எடிட்டரின்ரை கெட்ட காலமோ தெரியாது, அந்த நேரத்திற்கு அவர் வரவேற்பு பீடத்திற்கு வந்திருக்கிறார்.

உடனே வரவேற்பாளர் எடிட்டரைக் காண்பிக்க, அவரும் அவையளுக்கு கைலாகு கொடுத்திருக்கிறார். அவர் ஒரு நல்ல மனுசன். தமிழ் மக்களில் அனுதாபம் கொண்ட ஒருத்தர். உடனே இவையள் இரண்டு பேரும் தினா
வெட்டாக அவரிட்டை சொன்னைவையளாம், ‘நாங்கள் அமைச்சர்மார் வந்திருக்கிறோம். உங்கடை எடிட்டரை உடனே சந்திக்க வேண்டும்.’ இதைக் கேட்டதும் மனுசனுக்கு கொஞ்ச நேரம் ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டுப் போச்சு. அவர் கனடிய அரசியல்வாதிகளோடு நெருங்கிய உறவு உள்ள மனுசன்.

கனடாவில் ஏதாவது அரசியல் மாற்றங்கள் நடக்கிறது என்றால் அவருக்குத் தெரியாமல் நடக்காது. புதிதாக அமைச்சர்கள் பதவியேற்கிறது தொடக்கம் எந்த அரசியல் மாற்றம் நடந்தாலும் அவருக்குத் தெரியாமல் நடக்காது. அப்படி ஒரு அரசியல் செல்வாக்கு மிக்கவர் அவர். அப்படி இருக்கேக்குள்ளை தன்னிடம் இரண்டு தமிழர்கள் வந்து தாங்கள் அமைச்சர்கள் என்று கூறியதும் மனுசன் குழம்பி விட்டார்.

ஒருவேளை இந்தியாவில் இருந்து அமைச்சர்கள் யாராவது வந்திருக்கீனமோ என்று நினைச்சுப் போட்டு மனுசன் அவையளிடம் கேட்டிருக்கிறார்: ‘நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்த அமைச்சர்மார்?’ அதுக்கு அவையள் இரண்டு பேரும் வலு விறைப்போடையும், திமிரோடையும் சொல்லியிருக்கீனம், ‘நாங்கள் தமிழீழ அமைச்சர்மார்.’ அப்பவும் ஒன்றும் விளங்காமல் அவர் அவையளிட்டை கேட்டிருக்கிறார், ‘ஓ நீங்கள் தமிழ்நாடா? தமிழ்நாட்டு அமைச்சர்களா?’ என்று. உடனே அவையள் சொல்லியிருக்கீனம்: ‘இல்லையில்லை நாங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள். இப்பத்தான் பதவி ஏற்றனாங்கள்.’ மனுசனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆள் தன்ரை கையில் இருந்த பேனாவை வேண்டும் என்றும் நிலத்தில் விழுத்திப் போட்டு, பேனையை நிலத்தில் இருந்து எடுக்கிற மாதிரி அங்காலை திரும்பிக் குனிஞ்சு, சத்தம் போடாமல் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.

பிறகு ஒரு மாதிரி மனுசன் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையை நிமிர்த்தி அவையளிடம் சொல்லியிருக்கிறார், ‘எடிட்டர் இல்லை. அவர் வெளியில் போய் விட்டார். நான் அவரின்ரை அந்தரங்க உதவியாளர். அவரிட்டை ஏதாவது சொல்ல வேண்டி இருந்தால் என்னிடமே நீங்கள் சொல்லலாம். நான் அவரிடம் அதைக் கட்டாயம் தெரிவிப்பேன்’ என்று. அதோடை கதை முடிஞ்சுதென்றால் பரவாயில்லை. உடனே அந்தக் கோமாளி அமைச்சர்மார் இரண்டு பேரும் அவரிடம் சொன்ன பதில் தான் அவரை நின்ற இடத்திலேயே கொல்லென்று சிரிக்க வைத்து விட்டது.

அவையள் சொன்னைவையளாம்: ‘நாங்கள் அமைச்சர்மார். உங்களை மாதிரி உதவியாளர்களோடை எல்லாம் நாங்கள் கதைக்கிறதே எங்கடை இராஜதந்திர அந்தஸ்துக்கு மரியாதை இல்லை. நாங்கள் திரும்பவும் இன்னொரு நாள் வருவம். அப்பேக்குள்ளை எடிட்டரைச் சந்திக்கிறோம்.’ சென்னையிலை முப்பது வருசத்துக்கு முதல் நான் இருக்கேக்குள்ளை என்ரை வயதை ஒத்த கிழவன் ஒன்று அந்த நேரத்தில் விசர் கதை கதைக்கிற ஆட்களைக் கண்டால் என்னிடம் சொல்லும், ‘வெற்றுச் சோறு ரசத்துக்கு தகராறு’ என்று. மனுசன் அப்பிடிச் சொல்கிறதின்ரை அர்த்தம் அந்த நேரத்தில் எனக்கு விளங்குவதில்லை. உந்த கிரகம் கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை அமைச்சர்மாரின்ரை கதையைக் கேட்டுப் போட்டுத் தான் எனக்கு மனுசன் அலுக்கோசுகளைத் திட்டியதன் அர்த்தம் விளங்கியது.

இது போதாதென்று பாருங்கோ அன்றைக்கு பிரான்சில் இருந்து வந்த என்ரை மருமகன் என்னிடம் சொன்னான், ‘அம்மான், பாரிசில் கொஞ்ச அரை லூசுகள் தங்களை அமைச்சர்மார் என்று சொல்லிக் கொண்டு ஊர் ஊடாகத் திரியீனம். அதில் ஒருத்தர் முந்தி ரி.ரி.என் தொலைக்காட்சியில் ‘இது வெல்லும் நேரம், அது வெல்லும் நேரம்’ என்று போட்டி நாலு நிகழ்ச்சிகள் செய்தவர். இப்ப யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் மூன்றெழுத்து தனியார் ஊடகம் ஒன்றின் பிரான்ஸ் செய்தியாளராகப் பணிபுரிகின்றார். அவர் எங்கை போனாலும் தான் தான் தமிழீழத்தின் ஊடகத்துறை அமைச்சர் என்று பறைதட்டிக் கொண்டு இருப்பார்.

அந்த அரை லூசு அமைச்சர் எழுதுகிற அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு கட்டுரைகள் புலம்பெயர் தேசமொன்றில்  ஈழமுரசின் பெயரில் வெளிவருகின்ற டூப்பு (போலி) பத் திரிகை ஒன்றில் வெளிவருகிறது என்று கேள்விப்பட் டனான்’ என்றான்.

எனக்கு அதுக்குப் பிறகு ஒரு உண்மை உறைச்சுது. உந்த கிரகம் கடந்த பிரதம மந்திரி உருத்திரகுமாரன் வருசத்துக்கு இரண்டு மூன்று தடவை தன்ரை அமைச்சரவை கூடுது, அரசவை கூடுது, பாராளுமன்றம் கூடுது என்று அறிவிச்சவுடன் கிரகம் கடந்த அரசாங்கத்தின் ஊடக அமைச்சர் ஒன்று சொல்லி ஒருத்தர் அறிக்கை வெளியிடுவார். அதில் நாடுகடந்த அரசாங்கம் கூடுவதைக் கேள்விப்பட்டதும் சிறீலங்கா அரசாங்கம் கதிகலங்கிப் போயிருக்குது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். எழுதுகிறதுக்கு செய்திகள் இல்லையயன்று அதையும் ஒரு செய்தி என்று சிறீலங்கா என்ற சொல்லை மறுவளமாகக் கொண்டியங்கும் கட்டாக்காலி இணையத்தளம் ஒன்று ஊதிப்பெருப்பித்து செய்தியாக வெளியிடும். பிறகு அந்த இணைப்பை உந்தக் கிரகம் கடந்த அமைச்சர்மார் தங்களுக்குத் தெரிஞ்ச எல்லோருக்கும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைப்பீனம்.

உதிலை பகிடி என்னவென்றால் பிள்ளையள் உந்தக் கிரகம் கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கனவுலக அரசாங்கத்தை இரண்டெழுத்தாளர்... அவர் தான் உந்தக் கே.பி என்ற பெயரில் உள்ள இரண்டெழுத்தாளர் சிறீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டப்படி தான் உருவாக்கினவராம்.

2

ஒரு சிங்களக் கைக்கூலி அமைப்பான உந்தக் கிரகம் கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை கைக்கூலி அமைச்சர், அதுவும் தன்னைத் தமிழீழத்தின் ஊடகத்துறை அமைச்சர் என்று சொல்கிறவர், தங்கடை கனவுலக அரசாங்கம் கூடுகிறதைக் கேள்விப்பட்டதும் சிறீலங்கா அரசாங்கம் அச்சத்தில் தொடைநடு நடுங்கிப் போயுள்ளது என்று சொன்னால் அதை விடப் பெரிய பகிடி இருக்க முடியாது பாருங்கோ பிள்ளையள்.

இதில் அடுத்த பகிடி என்னவென்றால் சிறீலங்கா என்பதை மறுவளமாக எழுதும் கட்டாக்காலி இணையத்தளம் இப்ப உந்த அரை லூசு ஊடகத்துறை அமைச்சர் செய்தியாளராகப் பணிபுரியும் மூன்றெழுத்து ஊடகத்தால் விலைக்கு வாங்கப்பட்டு விட்டதாம். உந்த மூன்றெழுத்து ஊடகம் தான் ‘தமிழரின்ரை உடம்பிலை சிங்கள இரத்தம் ஓடுது, ஆமிக்காரன்கள் நல்லவங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவையள்’ என்றெல்லாம் எங்கடை மக்களையும், எங்கடை தேச சுதந்திர இயக்கத்தையும் கொச்சைப்படுத்தியது.

இப்ப உங்களுக்கு விளங்கியிருக்கும் சிங்களக் கைக்கூலிகளான இந்த வெற்றுச் சோறுகள் எல்லாம் ரசத்துக்கு தகராறாக நடக்கிறதின்ரை சூட்சுமம். எல்லாம் சிங்களவன் வீசுகிற எலும்புத் துண்டு செய்கிற வேலை.

அதுக்குள்ளை இன்னொரு பகிடி என்னவென்றால் பாருங்கோ, போன மாதம் ஜெனீவாவுக்கு ரணிலின் ஊன்று
கோல் சுமந்திரன் வந்திருந்த பொழுது, அவரைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு உந்த அரை லூசு ஊடகத்துறை அமைச்சர் படம் எடுத்தவர் பாருங்கோ. சிங்களக் கைக்கூலிகள் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக் கொண்டு படம் எடுக்கிறதில் பிரச்சினை இல்லை.

ஆனால் அதுக்கு அவர் கொடுத்த வியாக்கியானத்தைக் கேட்டியள் என்றால் நீங்கள் தலைசுற்றி விழுந்திடுவியள். அந்த அரை லூசு ஊடகத்துறை அமைச்சர் சொன்னாராம்: ‘பிரதமர் உருத்திரகுமாரனின் சிறப்புத் தூதுவராகத்தான் நான் சுமந்திரனை சந்திச்சனான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து செயற்படுவது பற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினனாங்கள். எங்கடை சந்திப்பு ஆரோக்கியமாக முடிஞ்சது. விரைவில் நல்ல செய்தி வரும்.’

சரி குஞ்சுகள், உந்த வெற்றுச் சோறுகள் ரசத்துக்கு செய்கிற தகராறைப் பற்றிக் கதைச்சு கடைசியில் வீட்டை போய் சோற்றுக்கு ரசம் ஊற்றிச் சாப்பிடுவதை நான் மறக்கப் போகிறேன். வரட்டே, பிள்ளையள்..?

நன்றி: ஈழமுரசு