விசா முடிந்த பின்னரும் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள 30,000 மலேசியர்கள்!

வெள்ளி நவம்பர் 08, 2019

சிறப்பான வாழ்க்கையை எதிர்ப்பார்த்து 30,000 த்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் ஆஸ்திரேலியாவில் விசா காலம் முடிந்து பின்னரும் தங்கியுள்ளதாக மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற நாடுகளை விட ஆஸ்திரேலியாவுக்கான விசா விண்ணப்பங்களில் மலேசியா முதன்மையான இடத்தில் உள்ளதாக மலேசியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மர்சூகி யாஹி தெரிவித்துள்ளார். 

“சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவில் நல்ல வாழ்க்கையை எதிர்நோக்கி அகதியாக தஞ்சம் கோருகிறார்கள். இருப்பினும், அவர்கள் அகதிகளாக கருதப்படுவதில்லை.”

சமீபத்தில், 33,000 மலேசியர்கள் 90 நாட்கள் விசா முடிந்த பின்னரும் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள தகவலை வெளிப்படுத்தியிருந்தார் மலேசியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ கோலெட்ஜினோவஸ்கி. தற்போது, அது தொடர்பான விவாதம் மலேசியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.  

“ஜூலை 2018 முதல் ஏப்ரல் 2019 வரையிலான காலக்கட்டத்தில்  4,973 மலேசியர்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோரியிருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார் கோலெட்ஜினோவஸ்கி(ஆஸ்திரேலிய உயர் ஆணையர்),” என நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மெஹத் சலீம் எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அல்லது பாதுகாப்பு விசா கோரும் மலேசியர்களை கண்காணிக்க ஆஸ்திரெலிய தரப்புடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார் மலேசிய துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மர்சூகி. 

“ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கக்கூடிய மலேசியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்க ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகள் மலேசியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்,” எனக் கூறியுள்ளார் மர்சூகி.