வீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்!

ஞாயிறு பெப்ரவரி 23, 2020

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன் என்று வீரப்பன் மகள் வித்யாராணி கூறியுள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி. வக்கீலுக்கு படித்துள்ள இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

சென்னை வியாசர்பாடியில் கணவருடன் வசித்து வரும் வித்யாராணி நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.

பா.ஜனதாவில் சேர்ந்தது ஏன் என்பது குறித்து வித்யா ராணி கூறியதாவது:-

எனது தந்தை வீரப்பன் அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் அவர் தவறான பாதைக்கு சென்றுவிட்டார். நான் நேர்மையான வழியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன்.

பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் மக்களை கவர்ந்துள்ளன. அவரது திட்டங்களால் கவரப்பட்ட நானும் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகள் வித்யாராணி பா.ஜனதாவில் இணைந்தது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமியிடம் கருத்து கேட்டபோது, அவர் நான் ஒரு கட்சி (தமிழர் வாழ்வுரிமை கட்சி)யில் நிர்வாகியாக இருக்கிறேன். அதனால் எனது மகள் பா.ஜனதாவில் இணைந்தது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.