வீட்டில் துப்பாக்கியால் சுட்டுப் பழகிய இளைஞன்! காவல்துறை விசாரணை -

வெள்ளி சனவரி 22, 2021

சென்னை அம்பத்தூரில், தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற இளைஞரை பிடித்து அம்பத்தூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, கலைவாணர் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(23). இவர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் பகுதிநேர தொழிலாக வீட்டில் நாய் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று தமிழ்ச்செல்வன் வீட்டில் இருந்து தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற காவல்துறை, சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பெரிய துப்பாக்கி மற்றும் 2 சிறிய துப்பாக்கிகள் மற்றும் இரும்பு குண்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அவை 'உதற்பையை' சுட பயன்படுத்தும் ‘ஏர்கன்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கிகள் என்பதும், அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதி (லைசென்ஸ்) தேவையில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் இரும்பு குண்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தமிழ்செல்வனை அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவரிடம் எதற்காக துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்றார்? என்ன பயன்பாட்டுக்காக துப்பாக்கி வாங்கினார் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவமால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.