வீட்டுக்காவலில் தாடியுடன் ஒமர் அப்துல்லா!

திங்கள் சனவரி 27, 2020

கொல்கத்தா: காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது தோற்றம் வருத்தமளிப்பதாகவும் ஜனநாயக நாட்டில் இது துரதிர்ஷ்டவசமானது என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் நகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீண்ட வெள்ளை தாடியுடன் ஒமர் அப்துல்லா இருப்பதுபோன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்தப் புகைப்படத்தில் ஒமரை அடையாளம் காண முடியவில்லை. வருத்தமாக உள்ளது. நம் ஜனநாயக நாட்டில் இதுபோல நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இது எப்போது முடிவுக்கு வரும்?’ என்று தெரிவித்துள்ளார்.வீட்டுக் காவலில் உள்ள காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, ‘சட்டவிரோதமாக 6 மாதங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். தனது தோற்றத்தையும் ட்வீட் செய்வதையும் பற்றி கவலைப்படமாட்டார்’’ என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ‘‘மத்திய அரசின் தவறான போக்கை இந்தப் புகைப்படம் சுட்டிக் காட்டுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.