வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று தனது உயிரைவிட்ட நாய்!!

புதன் நவம்பர் 04, 2020

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சிந்து நகரைச் சேர்ந்த தம்பதியினர். இவர்களது வீட்டில் ரியோ, ஸ்வீட்டி என்ற 2 நாய்களை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் குடும்பத்தினர் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து வீட்டிற்குள் நுழைய முயன்றது.

இதனை பார்த்த ரியோ என்ற நாய்,பாம்புடன் கடுமையாக சண்டையிட்டது.

இதில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. அதே நேரத்தில் பாம்பு கடித்ததில் அதன் விஷம் நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி நாயும் இறந்தது.

இரவில் நடந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிய தம்பதியினர் மறுநாள் காலை விடிந்ததும் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது பாம்பும், நாய் ரியோவும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் அருகிலேயே மற்றொரு நாயான ஸ்வீட்டி கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்திருந்தது.

வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை கொன்று, தனது உயிரை விட்டு குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் ரியோவின் உடலுக்கு குடும்பத்தினர் பால், அரிசி, பூக்களை தூவி தங்களது தோட்டத்திலேயே கண்ணீர் மல்க புதைத்தனர்.

அதனுடன் வாழ்ந்து வந்த மற்றொரு நாயான ஸ்வீட்டி ரியோவின் நினைவாக உணவு ஏதும் சாப்பிடாமல் சோகத்தில் இருந்து வருவதாக  தெரிவித்தார்.