வீடு வீடாக சென்று பணத்தை திருப்பி கேட்கும் வேட்பாளர்கள்!!!!

செவ்வாய் சனவரி 07, 2020

அரசியல்வாதிகள் ஏராளமாக கொள்ளையடிச்சு வச்சிருக்காங்க. அதைத்தான் ஓட்டுக்காக தருகிறார்கள். எல்லோரிடமும் பணத்தை வாங்குவோம். பின்னர் இஷ்டப்பட்டவருக்கு ஓட்டுப் போடுவோம் என்ற மனநிலை பலரிடம் இருக்கிறது.

அந்த மாதிரியானவர்களுக்கு இனி சிக்கல்தான். பணம் கொடுத்தும் தோற்றுப்போனவர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் சூழ்நிலை வந்திருக்கிறது.

செங்கம் யூனியனுக்கு உட்பட்ட புளியம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பூசை என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்று ஊரில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தி ஓட்டுக்கு பணம் வாங்குனீங்க தானே! ஆனால் ஓட்டுபோடவில்லையே. ஓட்டு போட்டீங்களா என்று கேட்டுள்ளார். ஆமாம், நாங்கள் போட்டோம் என்று பலரும் பதில் சொல்ல அதைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

நீங்கள் எல்லோரும் ஓட்டு போட்டிருந்தால் நான் எப்படி தோற்பேன்? ஒழுங்கு மரியாதையாக வாங்கிய பணத்தை திருப்பி தந்து விடுங்கள் என்று ஆவேசமாக கத்தினார். அதோடு கற்களை எடுத்து வீடுகளில் வீசியும் ரகளையில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் கலசபாக்கம் யூனியனுக்கு உட்பட்ட அனியாலை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர்.

அவர்களில் ஒருவர் ஓட்டுக்கு ரூ.500-ம், மற்றொருவர் ரூ.600-ம் இன்னொருவர் பணத்துடன் மூக்குத்தியும் வழங்கி இருக்கிறார். தோற்றவர்களில் ஒருவரான சேட்டு என்பவர் வீடுவீடாக சென்று பணத்தை திருப்பி கேட்டு வருகிறார்.

இன்னொருவர் தான் கொடுத்த பணம் மற்றும் மூக்குத்தி பரிசை வைத்துக் கொள்ளும்படியும் அடுத்து வரும் தேர்தலில் தவறாமல் வாக்களியுங்கள் என்றும் பிரசாரம் செய்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் இந்த மாதிரி சம்பவங்கள் தான் நடக்கின்றன.