வீடுகளில் ரகசிய குறியீடு வரைந்த வடமாநில வாலிபர்கள்: கொள்ளையடிக்க திட்டமா?

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

திண்டிவனம் அருகே பழைய துணிகள் வாங்குவது போல் நடித்து வடமாநில இளைஞர்கள் வீடுகளில் ரகசிய குறியீடு வரைந்துள்ளனர். இதனால் பயந்துபோன கிராம இளைஞர்கள் நேற்றிரவு விடிய விடிய ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் மானூர் அருகே கோபாலபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

நேற்று காலை இங்குள்ள 6வது தெருவில் வடமாநில இளைஞர்கள் சிலர் வீடு வீடாகச்சென்று பழைய துணிமணிகள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் பரிதாபப்பட்ட மக்கள் சிலர் பழைய துணிகளை கொடுத்து உதவி உள்ளனர்.

பின்னர் சிறிதுநேரத்தில் வீடுகளின் மதில் சுவர்களில் கலர் பென்சிலால் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீடும் அடக்கம். பழைய துணி வாங்க வடமாநில இளைஞர்கள்தான் இந்த ரகசிய குறியீட்டை வரைந்திருப்பார்கள் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்க வடமாநில இளைஞர்கள் திட்டமிட்டார்களா? என்ற அச்சம் கிராம மக்களிடையே எழுந்துள்ளது.

இதுபற்றி அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் யாரும் விசாரணை நடத்தக்கூட சம்பந்தப்பட்ட கோபாலபுரம் கிராமத்திற்கு வரவில்லை.

பாதுகாப்பு மற்றும் ரோந்துப்பணி யிலும் ஈடுபடவில்லை. இதனால் எந்த நேரத்தில் வடமாநில கொள்ளையர்கள் வருவார்களோ? என்ற அச்சத்தில் கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர்.

மேலும் கிராம இளைஞர்கள் கிராமத்தில் கையில் கழிகளுடன் விடிய விடிய ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

சந்தேகப்படும் வகையில் யாராவது கிராமத்திற்குள் நுழைகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் வரவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து கிராமத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவது என தெரிவித்தனர்.

அதேநேரம் போலீசார் கிராமத்தில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் புதுச்சேரியில் சாரம் மற்றும் திருமால்நகர் பகுதியில் வீடுகளின் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருந்தன.

கொள்ளையர்கள்தான் இதனை வரைந்திருப்பார்கள்? என பொதுமக்கள் சந்தேகப்பட்டனர்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிராமத்தில் உள்ள வீடுகளில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.