விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா!

ஞாயிறு மார்ச் 10, 2019

வேலாயுதம்' படத்தை பிறகு விஜய்யுடன் தான் மீண்டும் இணையவிருப்பதாகவும், `தனிஒருவன் 2' படத்தின் முதற்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். 

மோகன் ராஜா இயக்க, நடிகர் விஜய் நடித்து கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலாயுதம்'. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு, ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. பின்னர் தனிஒருவன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா - விஜய் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து `வேலைக்காரன்' என்ற படத்தை இயக்கினார். `வேலைக்காரன்' வெற்றி பெற்ற நிலையில், விஜய் - மோகன் ராஜா இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இருவரும் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய், அட்லி இயக்கத்தில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

 

 

மோகன் ராஜாவும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையில் பிசியானார். இந்த நிலையில், தான் விஜய்யுடன் விரைவில் இணையவிருப்பதாக கல்லூரி நிகழ்ச்சியொன்றில் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அது விஜய்யின் 64-வது படமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் `தனிஒருவன் 2' படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டதாகவும், தயாரிப்பாளர் மற்றும் படக்குழு தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.