விலகாதிருந்திருந்தால் நான் வீட்டுக்குச் சென்றிருப்பேன்

புதன் ஜூலை 15, 2020

நியாயமான தீர்வு பெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமது தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன்  எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன். 

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கருத்துப் பரப்புரைக் கூட்டம் திக்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விக்கினேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

 கொள்கை பிறழ்வு எந்தளவுக்கு ஒரு அசம்பாவிதத்தை, அழிவை எம் மக்களுக்குக் கொண்டு வரப் போகின்றது என்பதை உணர்ந்தே நான் என் பயணத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தெந்தக் கொள்கைகளைப் புறக்கணித்ததோ அவற்றை நாம் இப்பொழுது ஏந்திச் செல்கின்றோம்.

மொத்தத்தில் இன்றைய கூட்டமைப்பு என்று அழைக்கப்பட வேண்டியது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையே. தம்பி பிரபாகரனால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பானது கொள்கைகளை விட்டு மரணப் படுக்கையில் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. பாவம்! அவர்களை இத்துடன் வெளியேற இடம் விடுங்கள் என்பதே நாம் எம் மக்களிடம் விடும் கோரிக்கை. கொள்கைப் பற்றுள்ள தேசியக் கூட்டணியை கூட்டமைப்பின் இடத்தில் நிறுத்துங்கள் என்று எம் மக்களிடம் பணிவுடன் வேண்டுதல் விடுக்கின்றேன்.