விலங்குகள் போல் கூண்டில் இருக்கிறோம்!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019

காஷ்மீரில் தாங்கள் விலங்குகள் போன்று கூட்டில் அடைக்கப்பட்டிருப்பதாக மெகபூபா முப்தியின் மகள், உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு உருக்கமான கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 12வது நாளாக உயர்மட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கைது செய்து வைக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதலமைச்சர்கள் முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா ஜாவேத்  தனது தாயார் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இரண்டாவது வாய்ஸ் மெயிலை வெளியிட்டுள்ளார்.

அத்துன் உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு நேற்று ஒரு கடிதமும் எழுதி உள்ளார். வாய்ஸ் மெசேஜுடன் அந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இன்று நாட்டின் பிற பகுதிகள் இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே வேளையில், காஷ்மீரிகள் விலங்குகளைப் போல கூண்டுக்குள் வைக்கப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. நான் மீண்டும் பேசினால் எனக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டேன்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்  கற்பனை செய்ய முடியாத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  ஒரு குடிமகனுக்கு பேச உரிமை இல்லை. சிரமமான உண்மையை கூறியதற்காக நான் ஒரு போர்க் குற்றவாளியைப் போல நடத்தப்படுகிறேன் என்பது ஒரு சோகமான முரண்.

இவ்வாறு இல்திஜா ஜாவேத் கூறி உள்ளார்.