விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம்!!

செவ்வாய் சனவரி 25, 2022

ஹாங்காங்கில் ஒரு செல்லப் பிராணிக்கடை தொழிலாளி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வெள்ளை எலிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வெள்ளை எலியிடமிருந்து கடையில் வேலை பார்த்த நபருக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என ஹாங்காங் அதிகாரிகள் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், விலங்குகளுக்கிடையில் வைரஸ் பிறழ்வடைந்து மனிதர்கள் மத்தியில் புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்தும் சாத்தியம் குறித்தும் விலங்கு நல அறிவியலாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஹாங்காங்கில் வெள்ளை எலிகளைக் கொல்வது பல நாடுகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. மக்கள் வெள்ளை எலிகளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் இருந்து காப்பாற்ற முன்வருகிறார்கள், மற்ற பலர் மரணத்தை எதிர்கொள்ளும் விலங்குகளை மீட்பதற்காக செல்லப்பிராணி கடைகளுக்குச் செல்கின்றனர்.

விலங்குகளுக்கிடையில் ஏற்பட்ட கோவிட் நோய்த் தொற்றுகளில் இது சமீபத்தியது. 32 நாடுகளில் சிங்கம், புலி, பூனை, நாய், லிங்ஸ், மிங்க் வரை பல உயிரினங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக, கடந்த மாதம் உலக விலங்கு நல அமைப்பு கூறியது.

ஆனால் இந்த விலங்குகளில், கிட்டத்தட்ட அனைத்தும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஒப்பீட்டளவில் எளிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டு விலங்குகள் தான் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் விலங்கு நல வல்லுநர்கள்.

இதுவரை ஒரே ஒரு காட்டு விலங்கினம் மட்டுமே (வெள்ளை வால் மான்) மனிதர்களால் பாதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. அமெரிக்காவிலும் கனடாவிலும் விலங்குகளை பரிசோதித்த பிறகு இது நிரூபிக்கப்பட்டது, ஆனால் இன்னும் எந்த பரிசோதனையும் நடைபெறாத நாடுகளில் மனிதர்களிடமிருந்து மற்ற காட்டு விலங்குகளுக்கு வைரஸ் பரவுகிறது என்பதுதான் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

வன விலங்குகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள உலக அளவில் வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதாக உலக விலங்கு நல அமைப்பு கூறுகிறது.

அது ஏன் முக்கியம்?

காடுகளில் உள்ள விலங்குகள் வைரசின் தோற்றுவாயாக மாறக்கூடும், மேலும் அதன் விளைவாக அபாயகரமான திரிபு உருவாகி அது மனிதர்கள் மற்றும் விலங்கினங்கள் இரண்டுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்த விஷயத்தில் காட்டு விலங்கு கண்காணிப்பு மிக முக்கியம், ஆனால் அது நடக்கவில்லை” என்கிறார் சிங்கப்பூரில் உள்ள டியூக் – என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் வளர்ந்து வரும் தொற்று நோய்த் திட்டப் பேராசிரியர் லின்ஃபா வாங் .

நான் அதைச் செய்ய விரும்பினால் கூட, நான் எங்கிருந்து நிதியைப் பெறுவது, சோதனைகளின் மாதிரி அளவு என்ன, யாருடன் நான் ஒருங்கிணைந்து பணியாற்றுவேன் என்று எனக்குத் தெரியவில்லை.

இது நாம் சமாளிக்க வேண்டிய பெரும் சவாலாக உள்ளது.என்கிறார் அவர்.

இந்த தொற்றுநோய் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதால் ஏற்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது. மேலும் உலக கால்நடை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் அபாய மேலாண்மை வல்லுநர் பேராசிரியர் நோயல் மிராண்டா, நாம் இப்போது மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு வைரஸ் பரவுவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

வனவிலங்குகளை கொரோனாவுக்காக கண்காணிப்பது உலகளாவிய ஒன்றாக இருக்க வேண்டும், இப்போது அப்படி இல்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலான இடைமுகம் (தொடர்பு) ஆராயப்பட வேண்டும், அதற்கு பல துறைகள் ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.”

உதாரணமாக, நகர்ப்புற திட்டமிடுவோர், கழிவு மேலாண்மை வல்லுநர்கள் ஆகியோருடன் விஞ்ஞானிகள் இணைந்து செயல்படவேண்டும் என்கிறார் அவர். வைரஸ் மனிதர்களிடமிருந்து கழிவுநீர் அல்லது உணவு கழிவுகள் மூலம் பரவும் அபாயத்தை சரி செய்யும் நோக்கில் பணியாற்ற வேண்டும் என்கிறார் அவர்.

வனவிலங்குகளில் வைரஸ் தோற்றுவாய்கள்!

மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ்களுக்கான தோற்றுவாய்களாக விலங்குகள் பல சந்தர்ப்பங்களில் இருந்துள்ளன.

உதாரணமாக, வெளவால்கள் எபோலா, ஹெண்ட்ரா, நிபா வைரஸ்களுக்கான தோற்றுவாய்களாக இருந்துள்ளன. ரக்கூன்கள், நரிகள் ரேபிஸ் நோய்க்கான தோற்றுவாயாகவும், பேட்ஜர்கள் காசநோய்க்கான தோற்றுவாய்களாகவும் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய், விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என அவர்கள் கூறுகிறார்கள். முதலில் பன்றிகள் மூலம் மனிதர்களுக்கும், பிறகு மனிதர்கள் மூலம் பன்றிகளுக்கும் வைரஸ் பரவியது.

வெள்ளை வால் மான்களில் (உடல்நலக்குறைவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை) விஞ்ஞானிகள் SARS-COV-2 வைரசின் பிறழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என சோதித்து வருகின்றனர்.

வரிசைமுறைப் படுத்தப்பட்ட (சீக்வன்சிங் செய்யப்பட்ட) மாதிரிகளிலிருந்து குறிப்பிடத்தக்க பிறழ்வுகள் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்று பென் மாகாண பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும் இணை இயக்குநருமான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி கூறினார்.

நாங்கள் பரிசோதித்த மாதிரிகள் தொற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சேகரிக்கப்பட்டவை. வைரஸ் தொடர்ந்து மான்களிடையே பரவினால், வைரஸ் பிறழ்கிறதா இல்லையா என்பது சமீபத்திய எடுத்துக்காட்டுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தீர்மானிக்கப்படும், இது தற்போது நடந்து வருகிறது.”

இருப்பினும், வைரஸ் எவ்வளவு அதிகமாக பரவுகிறதோ, அந்த அளவுக்கு பிறழ்வுக்கான வாய்ப்பு அதிகம், அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது.

மிகப் பெரிய சவால்!

முழு வனவிலங்குகளையும் எப்படி கண்காணிப்பில் வைப்பது? பாலூட்டி இனங்கள் மட்டும் 5,000க்கும் அதிகம் உள்ளன. புரொசீடிங்ஸ் ஆஃப் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சில் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வில், தன் செல்களின் மீது ACE2 புரதம் இருக்கும் 410 தனித்துவமான முதுகெலும்பு கொண்ட இனங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த ACE2 புரதத்தின் மீது தான் கொரோனா வைரசால் ஒட்டிக் கொள்ள முடியும்.

ACE2 புரதமுள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில், 252 பாலூட்டிகள், 72 பறவைகள், 65 மீன்கள், 17 ஊர்வன மற்றும் நான்கு நீர்நில வாழிகள் அடக்கம்.

எல்லா பழைய உலக குரங்கின விலங்குகளும் ACE2 வழியாக SARS-COV-2 தொற்றுக்கு இலக்காகின்றன என்று எங்கள் பகுப்பாய்வில் தெரியவருகிறது. இதனால் சீனாவைச் சேர்ந்த 21 குரங்கின வகைகளில் பல SARS-COV-2 நோயின் தோற்றுவாயாக இருந்திருக்க சாத்தியமுண்டு என 2020ஆம் ஆண்டில் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இது வைக்கோல் அடுக்குகளுக்கிடையில் ஊசியைத் தேடுவது போலிருக்கும். என ஹாங்காங்கின் சிட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிர்க் ஃபைஃபர் கூறினார்.

கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர்களைப் பெற இன்னமும் போராடும் நாடுகள் உள்ளன, அவர்களுக்கு இது முன்னுரிமைப் பணியாக இருக்காது.

எனவே நாம் இதை எப்படி மேற்கொள்ளப் போகிறோம், அதை எவ்வாறு திறம்படச் செய்வது என்பது இப்போது முக்கிய கேள்வி என்கிறார் அவர்.