வினாத்தாள்கள் மாற்றப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு!

திங்கள் பெப்ரவரி 11, 2019

நாடளாவிய ரீதியில் நேற்று (10) இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சையின் போது, நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் தோற்றிய பரீட்சார்த்திகக்கு, பரீட்சை வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது என, இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, பரீட்சைகள் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான போட்டிப் பரீட்சைக்காக புத்தளம் மாவட்டத்தில் தோற்றியிருந்த மூன்று பரீட்சாத்திகள், அலைபேசியுடன் பரீட்சை எழுதியமை தொடர்பான விசாரணைகளை பரீட்சைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.