விண்வெளிப் போருக்கு ரஷ்யா தயாராகின்றதா?

புதன் ஜூன் 19, 2019

விண்வெளிப் படைப்பிரிவை உருவாக்குவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர நாட்டம் காட்டிவருகின்றார். அடுத்த தலைமுறைக்கான போர் விண்வெளியை மையப்படுத்தியே இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டு
வரும் நிலையில்,தரை,வான்,கடல் பாதுகாக்கப்படுவது போன்று விண்வெளியையும் பாதுகாக்க ஒரு படையை அமைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார்.

அமெரிக்கப் படையில் தற்போது 5 கட்டமைப்புக்கள் இருக்கிறன. தரைப் படை, விமானப் படை, கடலோரக் காவல்படை, 2 கடற்படை ஆகியவை. இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் ஃபோர்ஸ்(Space Force) எனப்படும் விண்வெளிப் படையை உருவாக்க இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கான திட்டங்களை நீண்ட நாட்களாக உருவாக்கியதாக கூறிய அவர், இதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்றும் கணக்கிட்டுள்ளார். இந்த விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சிறந்த பலம் பொருந்திய நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சிறந்த பலம் பொருந்திய நாடாக மாறும் என்றும் அவர் கூறியிருந்தார். மனதில் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாக டிரம்ப் கூறினார்.

இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறன. அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் பிரச்சனை செய்யலாம். அதேபோல் எங்காவது ஒரு கோளில் இருந்து புதிய உயிரினம் நம் மீது போர் தொடுக்கக்கூட வரலாம். இதை எல்லாம் தடுக்கத்தான் இந்த விண்வெளி படையை உருவாக்க இருப்பதாகவும டிரம்ப் விளக்கம் அளித்திருந்தார்.

1111

மற்ற படைகளுக்கு மிகவும் பயிற்சி அளித்து ஆட்களை எடுப்பது போலவே இதற்கும் ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். ஆனால் இவர்கள், சாதாரண பயிற்சிகளை பெறாமல் புதிய பயிற்சிகளை பெறுவார்கள். இவர்களுக்காக புதிய ஆயுதங்கள் உருவாக்க வேண்டும், புதிய தொழில்நுட்பம் மூலம் இந்த மொத்தப் படையும் வடிவமைக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்போதைக்கு விண்வெளிப் படையை உருவாக்கும் எண்ணமெல்லாம் இல்லை என்று கூறியது. அதன்படி பூமியில் இருக்கும் ஐந்து படைகளிலும் தன்னிறைவு பெற்று,போர் பயம் சென்ற பின் விண்வெளிப் படை குறித்து யோசிக்கலாம் என்று கூறி டொனால்ட் டிரம்பின் திட்டத்திற்கு தடை போட்டது.அதேபோல் செனட் சபையும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்நிலையில்,ரஷ்யா ஏற்கனவே விண்வெளிப் போருக்குத் தயாராகிவிட்டதா என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, விண்வெளித் தாக்குதலுக்கான ஏவுகணைகளை அது தயாரித்து வைத்திருப்பதும் அவற்றை விமானங்களில் இருந்தே விண்வெளிக்கு ஏவி தாக்குதல் நடத்தும் பலத்துடன் இருப்பது குறித்தும் அமெரிக்காவின் புலனாய்வுக் கட்டமைப்புக்கள் கண்டறிந்துள்ளன.

ரஷ்ய போர் விமானமான மிக்,31 ஒன்றில் முன் எப்போதும் காணப்படாத ஒரு நவீனரக ஏவுகணை பொருத்தப்பட்டிருந்தது நிழற்படம் ஒன்றின் மூலம் தெரியவந்தது.ஆரம்பத்தில் அதுவொரு சாதாரண ஏவுகணையாக இருக்கக்கூடும் என்றே எண்ணப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி அந்த ஏவுகணை ஆனது ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இது 2022ம் ஆண்டில் போர் செய்ய தயாராக இருக்கும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது. இதை அமெரிக்க புலனாய்விற்கு கிடைத்த மூன்று உளவுத்துறை தகவல்களுமே உறுதி செய்துள்ளன.

ஷ்யாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதமானது (Anti-Satellite Missile) ஒரு விண்வெளி வெளியீட்டு வாகனத்துடன் இணைக்கப்படும், பின் புவியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் உள்ள,எதிரி நாடுகளின் தொடர்பு மற்றும் நிழற்படங்கள் எடுத்து அனுப்பும் செயற்கைகோள்களை இலக்காகக் கொண்டு உலாவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஆகியவைகள் பூமியின் குறைந்த சுற்று வட்டப்பாதையில் தான் பயணம் செய்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு‘மாற்றியமைக்கப்பட்ட ரஷ்ய மிக்,31 விமானம் ஆனது, சுப்பர்சொனிக் ஏவுகணைக்கு நிகரான ஒரு மர்மமான ஏவுகணையை சுமந்து செல்லும் படங்கள், கடந்த செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் வெளியானது.

ஆக இதன் ஆரம்ப கால சோதனையானது செப்டம்பர் மாதம் முதல் வாரமே தொடங்கி இருக்கலாம் என்கிற ஒரு ஆதாரம். இதுவொரு விமான பயணத்தின் போது எவ்வாறு இருக்கும் போன்ற மதிப்பீடுகளை செய்யும் ஒரு சாதனையாகவும் இருக்கலாம் என்கிறது மற்றொரு ஆதாரம்.

இதன் அடுத்தக்கட்ட சோதனை ஆனது 2019ல் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க புலனாய்வு அறிக்கையின், இந்த ஏவுகணை வருகிற 2022ம் ஆண்டில் ரஷ்ய ஆயுதக் களத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுசார்ந்த கேள்விக்கு விளக்கம் அளித்த ரஷ்ய அணுசக்தி படைகளின் இயக்குனர் பவெல் போட்விக், ‘இது எனக்கு புரிகிறது, இது எனக்கும் தெரியும், இது ஒரு செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளது’ என்று கூறியுள்ளார். மேலும் மொஸ்கோ இதற்கு முன்பு இது போன்ற அமைப்புகளில் பணியாற்றி உள்ளது என்றும் கூறியுள்ளார். ‘இம்மாதிரியான ஒரு திறனை கொண்டு இருப்பது ரஷ்யாவிற்கு நல்லது தான்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே, சீனாவும் அமெரிக்காவும் இதேபோன்ற ஆயுதங்களை உருவாக்கி வைத்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளியான நிழற்படங்களை பற்றி கருத்து கூறிய, ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான தோமஸ் கரோக்கோ. ‘காற்றின் வழியாக தொடங்கப்படும் இயக்க,எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதங்கள் நீண்ட காலமாக வளர்ச்சி அடைந்து கொண்டு தான் வருகின்றன. அது சீனா, அமெரிக்கா, தற்போது ரஷ்யாவால் நிரூபிக்கப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார்.

செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் எந்த வகையிலும் புதியவை அல்ல. விளாடுமீர் புட்டின், தனது நாட்டிற்கு வளர்ந்துவரும் இராணுவ ஆயுதங்களைப் பற்றி அறிவித்த பிறகு, எட்டு மாதங்களுக்குள் இந்த புதிய வெளிப்பாடு வந்துள்ளது என்றால் ரஷ்யா எவ்வளவு தீவீரமாக உழைக்க வேண்டும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆயுத தயாரிப்பில் ரஷ்யாவை முந்தும் முனைப்பின் கீழ் வேலை செய்த அனைவர்க்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக சட்டவிரோதமான தடைகளை அறிமுகப்படுத்திய உங்களால் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விளாடுமீர் புட்டின் கடந்த மார்ச் மாதம் கூறி இருந்ததை மீண்டும் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக் கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த சில மாதங்களின் முன்புதான் அறிவித்திருந்தார்.

ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தாங்கள் தயாரிக்கும் ஏவுகணைகளின் ஆற்றல் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் 1987ம் ஆண்டில் ஒரு உடன்படிக்கை (Intermediate-Range Nuclear Forces) (INF) செய்து கொண்டன. அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மிக்கல் கொப்பர்சேவும், அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனும் இந்த ஒப்பந்தத்தில் கையயாப்பமிட்டனர். இதன்படி, இரு நாடுகளும் நடுத்தர ரக அணு ஏவுகணைகளை தயாரிக்க கூடாது. அதாவது, அணு ஆயுத மோதலைத் தடுப்பதற்காக, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய தொலைதூர ஏவுகணைகளை அழிப்பதற்கும், புதிய ஏவுகணைகளைத் தயாரிக்காமல் இருப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்திக் கொடுத்தது.

11

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு மதிப்பளிக்காமல் ரஷ்யா ஏவுகணைகளை தயாரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடம் உள்ள அத்துமீறலான ஏவுகணைகளை எல்லாம் அழிக்காவிட்டால் அந்நாட்டுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். 

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து விடுத்திருந்த அறிக்கையில், ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஐஎன்எப் ஒப்பந்த விதிமுறைகளை அமெரிக்க கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது.

ஆனால், ஒப்பந்தத்தை ரஷ்யா மீற வரும்போது, நாங்கள் அந்த ஒப்பந்தத்தை பின்பற்ற மாட்டோம்.
ரஷ்யா மீண்டும் இந்த ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றி, தான் தயாரித்த நடுத்தர ரக அணு ஏவுகணைகளையும், லோஞ்சர்களையும் அழிக்காவிட்டால், ஐஎன்எப் ஒப்பந்த விதிமுறையை பின்பற்றுவதை நாங்களும் நிறுத்துவோம். இந்த  ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்கி விட்டோம். இன்னும் 6 மாதத்துக்குள் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்? என கூறியிருந்தார்.

இதனையடுத்து அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஏவுகணை உடன்படிக்கையை முறித்துக் கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்கா இந்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டதால் நாங்களும் இதில் எங்களது பங்களிப்பை விலக்கிக் கொள்கிறோம் என புட்டின் விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது விண்வெளித் தாக்குதலுக்கான ஏவுகணையை ரஷ்யப் போர் விமானங்கள் சுமந்துகொண்டு திரிவது அமெரிக்க மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி: ஈழமுரசு