விரைவில் தமிழ்த் தேசியம் மெளனிக்கப்படும் நிலை - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

வியாழன் மே 30, 2019

சிறிலங்காவில் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தமிழர் தாயகக் கோட்பாட்டையும் தமிழர் வாழ்வியல் உரிமைகளையும் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றது. நீறு பூத்த நெருப்பாக எரிந்த தமிழின விடுதலைத் தீயை குண்டுவெடிப்பால் எழுந்த  புகைக்கூட்டம் மூடுமண்டலம் ஆக்கியிருக்கின்றது. 

தமிழ் அரசியல் கட்சிகளின் கையாலாகத்தனத்தை இந்தத் தாக்குதல்களின் பின்னரான நிலைமை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. சிங்கள தேசம் தமிழர்களை எந்த இடத்தில் வைத்திருக்கின்றது என்பதையும் இது வெளிப்படுத்தியிருக்கின்றது. 

தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால், தமிழர் தாயகம், அதிலும் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த வடக்கு மாகாணம் இன்றும் யுத்த களம் போலக் காட்சியளிக்கின்றது. 

தமிழ் மக்கள் மீண்டும் நிம்மதி அற்ற வாழ்க்கைக்குள் சென்றிருக்கின்றனர். ஏற்கனவே சிங்களப் படைகளாலும் சிங்கள அரசுகளாலும் வதைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீண்டும் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

ஈழ யுத்தம் ஆரம்பமானபோது தமிழர் தாயகம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக கெரில்லா தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் தமிழ் மக்களுக்கான தேசத்தை எல்லை நிர்ணயம் செய்து அதற்கேற்ப முன்னகர்கவுகளை மேற்கொண்டனர். சிங்கள தேசத்தை ஆக்கிரமிக்கும் நோக்கம் அவர்களிடம் இருக்கவில்லை. தமிழர் தாயகத்தில் பல்லின கலாசாரத்திற்கு அவர்கள் தடை விதிக்கவில்லை. சக இனங்களின் வாழ்வுரிமையை அவர்கள் மறுக்கவில்லை. 

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தாயகமாக எதை வரையறுத்தார்களோ, அதை சிங்கள தேசமும் தமிழர் தாயகமாக வரையறுத்திருந்தது. தமிழீழ விடுதலைப் போரில் தமிழர் தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்திருக்கின்ற போதிலும் சிங்கள தேசம் தமிழர்களின் தேச எல்லை நிர்ணயத்தை இன்றும் கடைப்பிடித்து வருகின்றது. 

ஏனெனில், அநுராதபுரத்திற்கு அப்பால் சிங்கள தேசத்தில் எந்தவித பாதுபாப்பு நெருக்குவாரங்களையும் கொடுக்காத சிங்களப் படைகள் வடக்கு மாகாணம் - தமிழர் தாயகம் - ஆரம்பிக்கும் இடத்தில் தொடங்கி பாதுகாப்பு நெருக்குவாரங்களை அதிகரித்திருக்கின்றனர். 

முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானோர் தமிழர்களாக இருக்கின்ற போதிலும், அந்தத் தாக்குதல்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாக நடத்தப்படவில்லை. மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தவிர ஏனைய தாக்குதல்கள் அனைத்தும் சிங்கள தேசத்திலேயே இடம்பெற்றன. அத்துடன், முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, சாய்ந்தமருது போன்ற இடங்களில் பயங்கரவாதிகளின் தங்குமிடங்கள் அழிக்கப்பட்டன. 

ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களிலோ சிங்களப் பிரதேசங்களிலோ இல்லாத பாதுகாப்புக் கெடுபிடிகள் தமிழர்கள் அதிகளவாக வாழும் வடக்கில் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. சிங்களப் பிரதேசம் முற்றுப்பெற்று தமிழர் தாயகம் ஆரம்பிக்கும் அனுராதபுரத்திற்கும் வவுனியாவிற்கும் இடையேயான பிரதேசத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. 

கொழும்பில் இருந்து வருகின்ற பயணிகள் அங்கு இறக்கப்பட்டு சோதனைகள் முடிவடைந்த பின்னரே வடக்கிற்குள் நுளைய அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோல, கொழும்பிற்குச் செல்பவர்களும் யாழ்ப்பாணத்தில் தொடங்கி, ஏ-9 நெடுஞ்சாலையில் ஆனையிறவு, மாங்குளம், வவுனியா எனப் பல இடங்களில் இறக்கி சோதனையிடப்பட்ட பின்னர் அநுராதபுரம் எல்லையில் இறுதிச் சோதனை முடித்து சிங்கள தேசத்திற்குள் நுளைய அனுமதிக்கப்படுகின்றனர். 

இதற்கு அப்பால் வடக்கே பல மாவட்டங்களிலும் பாதுகாப்பு என்ற போர்வையில் படையினரின் சோதனைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் இருந்ததைப் போன்று பிரதான வீதிகளில் முக்கிய சந்திகள், தீவகப் பிரதேசத்திற்கான நுழைவாயில்கள் அனைத்திலும் நிரந்தர சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயோதிபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் கூட இறக்கப்பட்டு சோதனைக்கு பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 

எதற்காக இந்தச் சோதனை நடவடிக்கை? யார் இதைத் தட்டிக் கேட்பது? தமிழர்களின் அதிகப் பெரும்பான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, 'நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் அவர்கள் இதைச் செய்கின்றார்கள். 

ஒரு சம்பவம் நடைபெற்ற பின்னர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அவர்களின் கடமை' என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரைப் போன்று பதிலளித்தார். கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எந்தக் கருத்தையும் கூறவில்லை. கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் இதேபோன்றுதான் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். 

ஆனால், குண்டுத் தாக்குதல்களை நடத்திய முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களத் தலைவர்களோடு அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்தி தமது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசி வருகின்றனர். அதன் மூலம் பல விடயங்களைச் சாதித்திருக்கின்றனர். 

குறிப்பாக, முஸ்லிம் வணக்கத் தலங்களான பள்ளிவாசல்களுக்கு சோதனையிடச் செல்லும்போது நாய்களுடன் செல்ல முடியாது, சப்பாத்துக்களுடன் செல்ல முடியாது, முன்னறிவிப்பு இன்றிச் செல்ல முடியாது போன்ற விடயங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு நாட்டின் தலைவர் முப்படைகளுக்கும் உத்தரவிட்டிரு;கின்றார். 

ஒரு சில முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியமைக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் எவரும் சிரமங்களுக்கு உட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி முப்படையினருக்கும் அறிவுறுத்துகின்றனர். முஸ்லிம் சமூகத்pன் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர்கள் கேட்டிருக்கின்றனர். 

ஆனால், குண்டுகள் வெடிக்காத தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நாளாந்தம் பெரும் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்க தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே அரசுக்கு எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகக் கை உயர்த்திவிட்டு வெளியே வந்து, தாங்கள் கை உயர்த்தாவிட்டாலும் அது நிறைவேறியிருக்கும் என சம்பந்தன், சுமந்திரன், சித்தார்த்தன் உட்பட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆக, வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூரண சம்மதத்துடன்தான் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வழிமொழிதல்களுடன்தான் தமிழ் மக்கள் வதைக்கப்படுகின்றனர். 

கிழக்கே, காத்தான்குடி, சாய்ந்தமருது போன்ற இடங்களில் சோதனைகளைத் தடுத்து நிறுத்திய முஸ்லிம் தலைவர்களைப் போன்றும், தெற்கே சோதனைகளை நிறுத்திய சிங்களத் தலைவர்களைப் போன்றும் தமிழ்த் தலைவர்களால், வடக்கே இந்தச் சோதனைகளைத் தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாக்க முடியாமல் போனது ஏன்? அப்படிச் செயற்பட்டால் அவர்களுக்கு அரச சலுகைகள் இல்லாமல் போகும். சிங்களத் தலைவர்களின் அன்பு பாராட்டல், நட்புரிமை இல்லாமல் போகும். இதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.  

வடக்கே, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் காடுகளை வெட்டி முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்திருகின்றார் றிசார்ட் பதியுதீன். அவரின் ஆதரவாளர்கள் முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்றுவோம் என சபதம் எடுத்திருக்கின்றனர். கிளிநொச்சியில் முஸ்லிம்களின் பெயரல் பல ஏக்கர் காணிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. 

யாழ்ப்பாணத்தில், பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களில் றிசார்ட் பதியுதீனின் நிதியில் பல ஏக்கர் காணிகள் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றது. அங்கு குடியேற்றப்படவுள்ள முஸ்லிம்கள் தொடர்பான விபரங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஏற்கனவே, யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் புத்தளத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மேற்படி காணிகளில் குடியேற்றப்படவுள்ளனர். 

வடக்கை சுவீகரிப்பதற்கு றிசார்ட் பதியுதீன் பெரும் பிரயத்தனம் செய்துவரும் நிலையில், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்கள் என அறிக்கை விட்டிருக்கின்றனர். இரா. சம்பந்தன் இறுக்கமாகக் கூறியிருக்கின்றார். அதைவிட, வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு எம்.பி சி.சிறிதரன் 'றிசார்ட் பதியுதீனுக்கு எதிராக நான் செயற்படமாட்டேன்' என பகிரங்க அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். 

றிசார்ட் பதியுதீனின் அமைச்சு ஊடாக தனிப்பட்ட ரீதியிலான பல நன்மைகளைப் பெற்றுவருகின்றார் சிறிதரன். இதேபோன்று, கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மேற்படி முஸ்லிம் அமைச்சர் ஊடாக தனிப்பட்ட நலன்களை, சலுகைகளை அனுபவிக்கின்றனர். இப்படியானவர்கள் தமிழ் மக்களில் அக்கறை எடுப்பார்கள் என கிஞ்சித்தும் எதிர்பார்க்க முடியாது. 

சிறிலங்கா அரசு மிகச் சிறந்த இராஜதந்திரத்துடன் நகர்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தனது நரித் தந்திரத்தை மிக நேர்த்தியாகச் செய்து வருகின்றார். கம்பரெலிய என்ற திட்டத்தின் மூலம் வடக்கின் அபிவிருத்தி நிதி என்ற போர்வையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல பில்லியன் கணக்கான ரூபாய்களை ரணில் வழங்கியிருக்கின்றார். 

இதன் மூலம் கூட்டமைப்பு எம்.பிக்களின் தமிழ்த் தேசியம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது. தமிழர் மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன பணத்திற்கு விலை போயிருக்கின்றது. 'நக்கினார் நாவிழந்தார்' என்பதற்கிணங்க கூட்டமைப்பு சலுகைகளுக்கு அடிபணிந்திருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களே! தமிழ்த் தேசியப் பேராளர்களே! முன்னாள் தளபதிகளே! இந்நாள் செயற்பாட்டாளர்களே! தமிழ்த் தேசியம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இது தமிழ்த் தேசியத்திற்கான எச்சரிக்கை மணி. இது தொடர்பாக எவருமே சிந்திக்க மறுக்கின்றீர்கள். தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய கொள்கையாளர்களும் ஒன்றுபட்ட சக்தியாக எழுச்சியடைந்தால் மட்டுமே 'தமிழர் தாயகம்' என்ற சொற்பதத்தைக் காப்பாற்ற முடியும். இல்லையேல் தமிழரின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதைப் போன்று விரைவில் தமிழ்த் தேசியம் மௌனிக்கப்பட்டுவிடும்.
 

நன்றி: ஈழமுரசு