விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடம் ரூ.2.10 கோடி பறிமுதல்!

புதன் ஏப்ரல் 03, 2019

பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2.10 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை காரில் எடுத்து சென்றார்களா? என காவல் துறையினர் , அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியிலும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்தில் இருந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒரு தகவல் வந்தது.

அதில் திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி செல்லும் காரில் ரூ.5கோடி ரொக்கப்பணம் கட்டு கட்டாக கொண்டு செல்வதாகவும், துரிதமாக மடக்கி பிடித்து பறிமுதல் செய்யவும் என உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில் பெரம்பலூர் ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன், டி.எஸ்.பி.க்கள் ரவீந்திரன், தேவராஜ், இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிருதிவிராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் அந்தோணிசாமி ஆகியோர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே போலீசாருக்கு தகவல் கிடைத்த கார், பெரம்பலூர் அரியலூர் சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே ஹைவே பேட்ரோல் போலீஸ் மூலம் பேரளி சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
 

இதையடுத்து ஏ.டி.எஸ்.பி. ரெங்கராஜன் காரை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, குன்னம் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் காரில் சோதனை செய்யப்பட்டது. இதில் நூதனமாக காரின் நான்கு கதவுகளின் உள்ளே மறைத்து வைத்தும், ஹேண்ட் பேக்குகளில் கட்டு கட்டாக வைத்தும் எடுத்து வந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.2.10கோடி ரொக்கப்பணம் ரூ.2ஆயிரம் மற்றும் ரூ.500 கட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.

காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் எங்கு கொண்டு சென்றனர், எதற்காக அதிக பணத்தை எடுத்து சென்றனர்? வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த பணம் திருச்சியில் இருந்து காரில் கொண்டு செல்லும் போதே, அதனை அறிந்த மர்மநபர்கள் திருச்சி ஐ.ஜி.அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி காவல் துறையிடம் சிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.