விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு,சீமான் பேச்சு எந்த அளவிற்கு உதவும்?

வியாழன் அக்டோபர் 17, 2019

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்து சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாய் அமையும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் சீமான் கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய குறித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று விடுதலைப் புலிகள் சொல்லவில்லை. மனிதநேய அடிப்படையில் பார்க்கும்போது, எந்த ஒரு தலைவரையும் கொல்லுவது என்பது அவருடைய கருத்தை வெல்வதாகாது.ஆகவே, நாங்கள்தான் கொன்றோம் என்று சொல்லலாமா? இவருக்கும், அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இது அவருக்குக் களங்கம் என்பதைவிட, விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கும் இது மிகப்பெரிய பின்வாங்கல். ஈழத் தமிழர்களுடைய எழுச்சிக்கு மட்டும் இது பின்வாங்கல் அல்ல.ஏழு தமிழர்கள் விடுதலையாக வேண்டும்.

எங்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலையை எதிர்பார்த்து நிற்கும் ஏழு பேருக்கு, சீமான் பேச்சு எந்த அளவிற்கு உதவும்?  ஈழத் தமிழர்களுடைய வாழ்வு மீண்டும் மலரவேண்டிய ஒன்றாகும்” எனத் தெரிவித்துள்ளார்.