விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க!உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம்?

திங்கள் சனவரி 25, 2021

டெல்லியில் 26-ம் திகதியன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மாபெரும் உழவு இயந்திர பேரணியை விவசாய அமைப்புகள் நடத்த உள்ளனர். 

இந்நிலையில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது விவசாயிகளின் உழவு இயந்திர பேரணியை தடுக்கும் நோக்கில் அரசு நிர்வாகம் கொண்டுவந்துள்ள முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் காட்டுத்தீயாக பரவியதும், அவரவர் இருக்கும் இடத்தில் சாலையை மறித்து உட்கார சொல்லி உள்ளார் பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாய்ட். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த எரிபொருள் விநியோக அதிகாரிகள், கேன் மற்றும் வேளாண் இயந்திரங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

ஆனால் மீரட்டை சேர்ந்த வாகன எரிபொருள் சங்கத்தின் உரிமையாளர்கள் அதுமாதிரியான உத்தரவுகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் விவசாயிகளின் உழவு இயந்திர பேரணிக்கு அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. குடியரசு தின அணிவகுப்பிற்கு எந்தவித பங்கமும் இல்லாமல் அமைதியான முறையில் பேரணி நடத்தலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.