விவசாயத்தை ஊக்குவிக்க கார்த்தி நடத்தும் பரிசு போட்டி!

திங்கள் ஜூலை 08, 2019

கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பின் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில்  ‘உழவன் அறக்கட்டளை’என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பிற்கு நடிகர் சூர்யா முதன் முதலில் நிதியுதவி அளித்து ஊக்குவித்தார்.
 
“விவசாயிகளுக்கு ஏதேனும் ஒருவகையில் நமது நன்றி கடனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன். விவசாயிகளை போற்றும் வகையில் அவர்களுக்கு இந்த அமைப்பு மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும்” என்று இந்த அமைப்பை தொடங்கியது குறித்து நடிகர் கார்த்தி கூறியிருந்தார்.
 
இந்நிலையில் உழவன் அறக்கட்டளை மூலம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கார்த்தி. அதில் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளுக்கான பரிசு போட்டி என்ற தலைப்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.

நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களை தேர்ந்தெடுத்து முதல் மூன்று கருவிகளுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.