வலிவடக்கு தவிசாளரின் சாரதி மீது தாக்குதல்!!

ஞாயிறு டிசம்பர் 20, 2020

வலிவடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக இளவாலை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இளவாலை வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.40மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தாக்கியவரின் பெயர் விபரங்கள் குறித்த முறைப்பாட்டின் போது தெரிவிக்கப்படவில்லை என காவல்துறையினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவாலை சேந்தாங் குளம் பகுதியில் உள்ள வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வலி வடக்கு பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் சிறிய தகப்பனார் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வலிவடக்கு தவிசாளர் சுகிர்தனுடன் முரண்பட்டு கொண்டனர்.

தமது கட்சி தொலைக்காட்சியில் வலிவடக்கு தவிசாளர் தமது அணியில் இணைந்து உள்ளதாக போலி செய்தியினையும் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்ததாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவமானது வாகனத்தில் தவிசாளர் அமர்ந்திருந்த பக்கமே இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.