வல்லாதிக்க சக்திகளின் போட்டிக் களமாக சிறீலங்காத் தேர்தல்!

வியாழன் அக்டோபர் 31, 2019

தமிழ்த் தேசிய அரசியலின் போக்கு பன்னாடுகளின் ஆதிக்கத்திற்கு ஏற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைந்துகொண்டே சென்றிருக்கின்றது. பூகோள அரசியல் மாற்றத்திற்கு ஈடுகொடுத்து, அதன் அசைவுக்கு ஏற்ப இராஜதந்திர நோக்கோடு நகரவேண்டிய தேவை ஈழத்தமிழினத்திற்கும் ஏற்பட்டிருக்கின்றது.

சிறிய நாடொன்றுக்குள், கட்டமைக்கப்பட்ட சிறிய தேசம் ஒன்றிற்கு அங்கீகாரம் பெறுவது என்பது தனியே அந்த நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. கடந்த காலங்களில் நாடுகள் தனியே இயங்கு நிலையில் இருந்தாலும் தற்போது பூகோள மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள
வேண்டி உள்ளது.

சிறீலங்காவிற்கும் தமிழீழத்திற்கும் இது விதிவிலக்கானது அல்ல.தற்போது சிங்களவர்களால் சிறீலங்கா என அழைக்கப்படும் நாடு அந்நியர் ஆட்சிக் காலத்தில் மூன்று தேசங்களாக பிரிந்திருந்தது. இரஜரட்டை, மலயரட்டை, உருகுணை ரட்டை என அழைக்கப்பட்ட இந்த மூன்று தேசங்களுக்கும் தனித்தனி மன்னர்கள், தனித்தனி நிர்வாக அலகுகள் இருந்தன. மூன்று தேசங்களுக்கும் தனித்தனியான படைகளும் இருந்தன. ஒரு தேசத்தின் இறையாண்மைக்குள் மற்றைய தேசம் மூக்கை நுழைக்கவில்லை. அவை பூரண சுயாட்சியுடன் இயங்கின.

வர்த்தக ரீதியான தொடர்புகளை தமக்குள் பேணிக்கொண்டன. அந்நியர் வருகையால் ஏற்பட்ட மாற்றம் இந்தத் தேசங்களின் இறையாண்மைக்கு ஆப்பு வைத்தது.

ஐரோப்பியர் ஆக்கிரமித்தபோது ஈழத்தில் தமிழர் அரசு கோலோச்சினர். சிங்கள தேசத்திற்கு இணையாக, அவர்களை விடவும் படை பலத்திலும் நிர்வாகத் திறத்திலும் சிறப்பாகவே தமிழர் ஆட்சி நடைபெற்றது.

ஆனால், 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஈழத்தை ஒன்றுபடுத்தியபோதே தமிழரின் ஆட்சி பறிபோனது. ஆக, ஈழத்தமிழருக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பும் கடமையும் பிரித்தானியாவுக்கு இருக்கின்றது.

அதில் இருந்து அவர்கள் நழுவிச்செல்ல முடியாது. ஈழத்தமிழர் அழிவுக்கான பொறுப்பையும் பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியர் தமது காலணித்துவத்தில் இருந்து இலங்கையை விடுவிக்கும்போது உரிய சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. அப்போதும் இப்போதிருக்கும் தமிழ்க் கட்சிகள் போல இருந்து சிங்களவர்களுடன் நட்பு பாராட்டிய தமிழ்த் தலைவர்கள் தங்கள் சுகபோகங்களுக்காக தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளைத் தாரைவார்த்தனர்.

இன்றுவரை தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு அன்றிருந்த தமிழ்த் தலைவர்களே காரணம் என்பதில் யாரும் மாற்றுக் கருத்துக் கூற முடியாது.

சிறீலங்காவின் முதலாவது ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ முதல் தற்போது பதவியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன வரை 7 ஜனாதிபதிகள் ஆட்சி நடத்தியிருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட தமிழ் மக்களின் அக்கறை கொண்டவராக இருந்ததில்லை.

தமிழ் மக்கள் ஈழத்தின் ஆதிக்குடிகள் என்ற அடிப்படையில், 1948 ஆம் ஆண்டு அவர்களிடமே ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படவேண்டி இருந்த நிலையில், எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்ற காரணத்தைக் காட்டி சிங்களவர்களிடம் அதிகாரம் கையளிக்கப்பட்டமை ஈழத்தமிழருக்கான அழிவின் ஆரம்பமாக அமைந்தது.

அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்களை அடக்கி ஆளும் தந்திரத்தையே சிங்கள ஜனாதிபதிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

எதிர்வரும் 16 ஆம் திகதி சிறீலங்காவிற்கு மற்றுமொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுகின்ற பெரும்பான்மை பலம் கொண்ட இரு வேட்பாளர்களில் ஒருவர்கூட தமிழர் நலன்களில் அக்கறை கொண்டவராக இல்லை. இன அழிப்பை நடத்திய கோத்தபாய ராஜபக்ச ஒரு அணியிலும் இன அழிப்பிற்கு உதவிய சஜித் பிரேமதாசா மற்றைய அணியிலும் களம் இறங்கியிருக்கின்றனர்.

இவர்களில் யார் பதவிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு துளியவேனும் நலன்கள் கிடைக்கப்
போவதில்லை.

கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்கள் தொடர்பாக எந்தவிதக் கருத்துக்களும் இல்லை. தமிழர்களை ஒரு பொருட்டாகவே அவர் கருதவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே அவர் முன்னுரிமை கொடுத்திருக்கின்றார்.

படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியிருக்கின்றார். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழர் தாயகத்தில் புதிய படை முகாம்கள் அமைக்கப்படும். முற்றுமுழுதாக சிங்கள இனவாதத்தை கட்டியயழுப்புவதற்கான மனிதராகவே கோத்தபாய தன்னை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

தான் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான விகாரைகள் கட்டியயழுப்பப்படும் என சபதம் எடுத்திருக்கின்றார்.

சஜித் பிரேமதாச, அதற்கு ஒருபடி மேலே சென்று, தான் ஆட்சிக்கு வந்தால் பெளத்த பல்கலைக்கழகம் ஒன்று கட்டப்பட்டு பெளத்த சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவேன் எனச் சபதம் செய்திருக்கின்றார். சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வந்தால் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழர் நிலங்கள் வேகமாகச் சுவீகரிக்கப்படும். தற்போது தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் தொல்லியல் திணைக்களம் அவரது அமைச்
சின் கீழேயே வருகின்றது.

அந்தத் திணைக்களமே திருகோணமலையில் தமிழர் பூர்வீக நிலமான கன்னியாய் வெந்நீருற்று, முல்லைத்தீவில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம், வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகம் உள்ளிட்ட தமிழரின் பூர்வீக இடங்களை ஆக்கிரமித்து அங்கு விகாரைகள் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருக்கின்றது.

யாழ்ப்பாணக் கோட்டையிலும் அந்தத் திணைக்களத்தினால் பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

ஆக, போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களும் தமிழர்களையும் தமிழர் தாயகத்தையும் ஆக்கிரமித்து, அடிமைகொள்வதில் வெற்றிகண்டவர்கள். இனிமேலும், அவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வார்கள் என எந்த தமிழர்களும் எண்ணவில்லை.

பூகோள அரசியலில், ஒவ்வொரு நாடுகளின் அரசியலையும் ஏனைய நாடுகள் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. அதிலும், வளர்முக நாடுகளின் உள்ளக விடயங்களில் தாக்கம் செலுத்தும் சர்வதேச நாடுகள், அங்கு தமது ஆதிக்கம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதற்காக தமது போக்கிற்கு இயைந்து போகக்கூடியவர்கள் ஆட்சிக்கு வருவதையே விரும்புவார்கள். அந்த செயற்பாடே தற்போது சிறீலங்காவிலும் நடைபெறுகின்றது.

சஜித் பிரேமதாசா ஆட்சிக்கு வரவேண்டும் என அயல் நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அவரது கடும்போக்கும் அவரது சீன சார்புக் கொள்கையும் தென் ஆசியப் பிராந்தியத்தில் தமது நடவடிக்கைகளுக்கு தடங்ககல்களை ஏற்படுத்தும் என இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கவலையடைந்துள்ளன.

அவர்களுக்கு தமிழர் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லை. மாறாக சிறீலங்காவில் எவரது ஆட்சி அமையக்கூடாது எவரது ஆட்சி அமையவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் சிறீலங்காவில் தமது பிடி நழுவி மீண்டும் சீனாவின் பிடி தலைதூக்கும் என இந்தியா அஞ்சுகின்றது. தென்னாசியா பிராந்தியத்தையே தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பும் சீனா, அதற்கு ஏற்ப சிறிலங்காவில் பல நடவடிக்கைகளைச் செயற்படுத்தி வருகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சீன அரச பல்கலைக்கழகமொன்று மேற்கொண்ட ஆய்வில் தெற்காசியாவில் சீனாவின் தன்னாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சிறீலங்காவே மிகப்பொருத்த
மான இடம் என சீன அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இரு தடவைகள் பதவி வகித்த காலப்பகுதியில் சீனா சிறீலங்காவின் தென்பகுதியில் வலுவாகக் காலூன்றியது. இந்தியா உள்ளிட்ட எந்த நாடுகளும் எதிர்பார்க்காத அளவுக்கு சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனா பெருமளவு கடன் தொகையை வழங்கியது.

எரிபொருள் மற்றும் மின்வலுத் திட்டங்களின் கீழ் சீன அரசின் நிதி அனுசரணையுடன் நுரைச்சோலை அனல்மின் நிலையம், சிறிலங்காவிற்கு ஒளியூட்டல் - ஊவா மாகாணம், சிறிலங்காவிற்கு ஒளியூட்டல் ‡ கிழக்கு மாகாணம், சிறிலங்காவிற்கு ஒளியூட்டல் - வடமாகாணம், கிராமிய மின்வழங்கல் திட்டம், களனிதிஸ்ஸ டீசல் சேமிப்பகத் திட்டம், முத்துராஜவெல எண்ணைத் தாங்கித் திட்டம், பெருநில நீர் மின் திட்டம் போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி திட்டங்களில் ரயில்வே அலகுகள் திட்டம், கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை அபிவிருத்தி, வடக்கு பாதை புனர்நிர்மாணத் திட்டம், தெற்குப் பாதை அபிவிருத்தித் திட்டம், மாத்தறை, பெலியத்த ரயில்வே திட்டம், சுற்றுவட்ட நெடுஞ்சாலைத் திட்டம், தெற்கு அதிவேக நெஞ்சாலை, தெற்கு அதிவேக பாதை, முன்னிலை பாதை திட்டம் போன்ற திட்டங்கள் சீன அரசின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் தாமரைக் கோபுரம், மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி, நிலக்கீழ் சுரங்கத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்களில் மொறக்கந்த அபிவிருத்தி திட்டம், குருணாகல பெரும்பாக நீர்விநியோகத் திட்டம் என்பன சீன அரசின் நிதி அனுசரணையுடன் செயற்படுத்தப்பட்டுள்ளன.

தெற்கை ஆக்கிரமித்த சீனா, தற்போது வடக்கிலும் கண் வைத்துள்ளது. இந்திய உப கண்டத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு வடக்கை ஆக்கிரமிப்பதே சிறந்த வழி என்பதை சீனா உணர்ந்த வடக்கிலுள்ள பொருளாதார மையங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முற்பட்டுள்ளது.

சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு அச்சம் காரணமாக அச்சமடைந்த இந்தியா, யாழ்ப்பாணத்தில் தனது தனியான துணைத் தூதரகம் ஒன்றை அமைத்து வடக்கை தனது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாகவே வடக்கில் மீளக்குடியேறியவர்களுக்கு என 65 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்தது.

மேலும், பலாலியில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் இந்தியா தீவிர முயற்சி எடுத்தது. எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசா வெற்றியடையவேண்டும் என இந்தியா விரும்பு
கின்றது. எதிர்பாராத விதமாக கோத்தபாய ராஜபக்ச வெற்றியடைந்தால் பலாலி விமான நிலையத்தை சீனா கைப்பற்றி அங்கு தனது செலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் என அச்சமடைந்த காரணத்தாலேயே மிக அவசரமாக அரைகுறையுடன் வேலைகள் நிறைவடையாத நிலையில் இந்த விமான நிலையத்தை திறந்துவைத்துள்ளது.

பலாலி விமான நிலையத்திற்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனவும் நல்லாட்சி அரசு செய்த சிறந்த செயற்பாடு இதுவெனவும் தமிழ் மக்களில் சிலர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். ஆனால், சீனாவை எதிர்த்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா எடுத்த முயற்சி இதுவென எவருக்கும் எளிதில் புரியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்  தீர்ப்பதில் சிங்களத் தரப்புக்கு எவ்வாறு அக்கறை இல்லையோ அதேபோலத்தான் இந்தியாவுக்கும் இதில் துளியளவும் அக்கறை இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை ஏன் அழித்தோம், அவர்களை அப்படியே இருக்க விட்டிருக்கலாமே என இந்தியா தற்போது கவலையடைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலகளின் ஆட்சி இருக்கும்வரை வடக்கில் எந்த அரசும் கால் பதிக்க முடியவில்லை என்பதையும் இந்தியா தற்போது உணரத் தலைப்பட்டுள்ளது.

எனவே, நடைபெறவிருக்கும் தேர்தல் பன்னாடுகளுக்கு, அதுவும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பிராந்தியப் போட்டியாகவே அமையப்போகின்றது. அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளின் அழுத்தங்களும் இதில் செல்வாக்குச் செலுத்தும். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டும் என விரைவில் அறிவிக்கும்.

அந்த அறிவிப்பு தமிழ் மக்களின் வாக்களிப்பில் தாக்கம் செலுத்தும்.

ஆக, தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆழமாகத் தொடர்புடைய நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவையும் பிரித்தானியாவையும் புறந்தள்ளிவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்தத் தீர்வையும் காண முடியாது என்பது நிதர்சனம். எனவே, தமிழ் மக்கள் இந்தியாவை நோக்கி மீண்டும் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும்.

தமிழக மக்களைத் துணைக்கு அழைத்துக்கொண்டு இந்த நகர்வை முன்னெடுக்க முடியும். அதேபோல பிரித்தானியா நோக்கியும் தமிழரின் இராஜதந்திரச் செயற்பாடு அமைவேண்டும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு இந்தியாவும் பிரித்தானியாவும் மட்டுமே நேரயாக பதிலளிக்கக்கூடியவர்கள். இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் தீவிரமாக கரிசனை செலுத்தவேண்டும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு