வங்கிகளில் கடன் பெற்று மோசடி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை வேண்டும்!

சனி மே 11, 2019

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய இரண்டாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசோ செவிடன் காதில் ஊதிய சங்கு போல, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்காமல் மிகவும் அலட்சியமாக இருக்கிறது.

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கரும்பு கொள்முதல் நிலுவைத் தொகையைக் கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தாமலும், சர்க்கரை ஆலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமலும் எடப்பாடி பழனிசாமி அரசு கரும்பு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகள் பெயர்களில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதால் விவசாயிகள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனர்.

கடலூர் மாவட்டம், இறையூரில் அம்பிகா சர்க்கரை ஆலையும், ஏ.சித்தூரில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த சர்க்கரை ஆலைகள் அந்தப் பகுதியில் உள்ள 11 ஆயிரத்து 523 விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்துள்ளன. ஆனால், விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கரும்பு கொள்முதல் தொகையை முழுமையாக வழங்காமல் இரு சர்க்கரை ஆலைகளும் நிலுவையில் வைத்துள்ளன.

கடந்த வாரம் கரும்பு சாகுபடி செய்து மேற்கண்ட சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி வரும் விவசாயிகளுக்கு, விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளிலிருந்து அவர்கள் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று முன்னறிவிப்புத் தாக்கீதுகள் அனுப்பப்பட்டுள்ளன.

வங்கிகளில் கடனே வாங்காமல் உள்ள தங்களுக்கு எப்படி பாரத ஸ்டேட் வங்கி நோட்டீசு அனுப்பி இருக்கிறது என்று புரியாமல் குழம்பி நின்ற விவசாயிகள் எஸ்.பி.ஐ. வங்கிகளை முற்றுகையிட்டனர். அப்போதுதான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து இருப்பதும், வங்கிகளுக்கு அவற்றைத் திருப்பிச் செலுத்தாததால், விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பதையும் விவசாயிகள் அறிந்து கொண்டனர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான சவப்பூர் அருகே உள்ள கச்சிமயிலூரைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவினர் நடத்திய விசாரணையில் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கிகளில் 88.51 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள தகவல் அம்பலம் ஆகி உள்ளது.

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் இயங்கும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூர் அருகே கோட்டூரில் செயல்பட்டு வரும் அம்பிகா சர்க்கரை ஆலையும் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய 82 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றி வருகின்றன.

இந்நிலையில் கபிஸ்தலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயியான இராமகிருஷ்ணன் என்பவருக்கு கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கிக் கிளையிலிருந்து ஒரு தாக்கீது சென்றுள்ளது. அதில் அவர் வங்கியில் 25 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து 28 இலட்சம் ரூபாயாக உள்ளதாகவும், அதை உடனே செலுத்த வேண்டும் என்றும் வங்கியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற விவசாயி இராமகிருஷ்ணன் மேற்கண்ட வங்கியில் ஒரு பைசா கூட கடன் வாங்கவில்லை என்றும், ஆலையில் கரும்பைப் பதிவு செய்தபோது, அதன் ஊழியர்கள் பல்வேறு படிவங்களில் தன்னிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டனர் என்றும், அதைப் பயன்படுத்தியே வங்கியில் ஆலை நிர்வாகம் கடன் பெற்று இருக்கிறது என்றும் புகார் கூறி உள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளை மோசடி செய்து போலி ஆவணங்கள் மூலம் சர்க்கரை ஆலைகள் இதுவரை 360 கோடி ரூபாய் கடன் பெற்று இருக்கின்றன.

தஞ்சை. கடலூர் மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் பெயரில் மோசடி செய்து வங்கிகளில் கடன் பெற்றுள்ள அம்பிகா மற்றும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகளை நடத்தி வரும் நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள மற்ற சர்க்கரை ஆலைகளிலும் இதுபோன்ற மோசடிகள் நடைபெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.