வன்னியில் இராணுவ ஆட்சி ஏற்படாமல் தடுப்பது மக்கள் பொறுப்பு

புதன் ஜூலை 15, 2020

வன்னி தேர்தல் மாவட்டத்தில் எதிர்காலத்தில் மறைமுக இராணுவ ஆட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. இம்முறை ஆளும் பொதுஜன முன்னணி சார்பில் ஒரு ஓய்வுபெற்ற உயர் இராணுவ அதிகாரி போட்டியிடுகின்றார்.

இவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று மாவட்டங்களிலும் இராணுவ ஆட்சி உருவாவதற்கான ஆபத்து உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற வேட்பாளருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். 

 வவுனியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது;

 ;நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் விசேடமாக வன்னி தேர்தல் மாவட்டம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிங்களத் தேசிய கட்சிகள் வன்னி மாவட்டங்களை இலக்கு வைத்து தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

 எதிர்காலத்தில் திட்டமிட்ட வகையிலான பெரும்பான்மையின குடியேற்றங்கள் செய்வதை நோக்கமாக கொண்டு அவர்கள் செயற்படுவது தெளிவாக புலப்டுகின்றது. அதிலும் தமிழ் மக்களின் அரசியல் ஏகப்பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கியை சிதறடித்து அதன் நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை குறைப்பதற்கான மறைமுகமான சதிவேலை நடைபெற்று வருகின்றது.

 இதுதொடர்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தவேலையை செய்வதற்காகவே 28 சுயேட்ச்சை குழுக்களும், இன்னும் பல பெயர் அறியாத சிங்கள கட்சிகளும் கட்சிகளும் களமிறக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல நூற்றுக்கணக்கான வேட்ப்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்ச்சிகளை அறியாமல் பல வேட்பாளர்கள் அதற்குள் போய் சொற்பளவான பணத்துக்காக அகப்பட்டுள்ளனர்.

 அத்துடன் இம்முறை ஆளும் பொதுஜன முன்னணியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு எந்தவிதமான தொடர்புமில்லாத ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரி ஒருவரை களமிறக்கியுள்ளார்கள்.

இராணுவ அதிகாரி தானாக போட்டியிடலாம். அதில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் வன்னியில் ஏன் இவர் திணிக்கப்படவேண்டும்? அதுமட்டுமல்லாமல் அந்த கட்சி சார்பாக அவரை வெற்றி பெற வைப்பதற்கான கடும் பிரயத்தனம் நடைபெற்று வருகிறது. இதனை அறியாமல் அந்த கட்சிக்குள் உள்ளவர்களும், ஆளும் கட்சியின் சார்பான கட்சி சார்ந்த பலரும் இங்கே தாங்கள்தான் எதிர்கால அமைச்சர்கள் என தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் நினைப்பது எதுவும் நடைபெறாது.

 இந்த முன்னாள் இராணுவ அதிகாரி வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இவர் பெற்றிபெறும் பட்சத்தில், இவருக்கு அமைச்சர் பதவி அல்லது பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும். இதன் மூலம் எதிர்காலத்தில் வன்னி மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக்களின் தலைவராக இவர் நியமிக்கப்படுவார். அதன் பின்னர் மாவட்ட குழு கூட்டங்களை தலைமை தாங்கும் போது என்ன நடக்கும் என நான் கூறித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்பது இல்லை. யாரும் வாய் திறந்து பேச முடியாத நிலை ஏற்படும்.

கட்டளைகள் பிறப்பிக்கப்படும். அவை நடைமுறைப்படுத்தப்படும். இராணுவம், காவல் துறை என்பன அவர் பின்னால் நிக்கும். அப்போது அதிகாரிகள் வாய் திறக்க பயப்படுவார்கள். மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் கணக்கில் எடுக்கப்படாது. கூட்டங்கள் தமிழர் பிரதேசத்தில் தனிச் சிங்களத்தில் நடைபெறும்.

 ஜனாதிபதி பொறுப்பேற்ற பின்னர் பல பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. வன்னி மக்களை தங்கள் அடிமைகளாக வைத்திருக்கும் மறைமுக திட்டமே இது.

எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். இவ்வாறானவர்களையும், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்களுக்கு துணை போகின்றவர்களையம் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைக்கு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து, ஆதிக்கபப்டியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வன்னி தேர்தல் தொகுதியில் வெற்றி பெற வைப்பதன் மூலமே இவ்வாறான நடவடிக்கைளை தடுத்து நிறுத்த முடியும்.

 இவ்வாறான விடயங்கள் எதனையும் யோசிக்காமல், தாங்கள் கடந்த காலங்களில் செய்தவற்றை, எதிர்காலத்தில் செய்யவுள்ளவை பற்றி வாய்திறக்காமல் கூட்டமைப்பு உங்களிற்கு என்ன செய்தது என்ற கோசத்துடன் உங்கள் வீட்டுப் படலைகளை தட்டிக்கொண்டு தேர்தல்கால சலுகைகளை வாய் மூலம் வழங்கும் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் சுகாதார அமைச்சரும், வன்னி தேர்தல் தொகுதியின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருமான மருத்துவர் சத்தியலிங்கம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.