வரலாற்றைத் தொலைத்த இனம் வரலாற்றில் வாழ முடியாது! 

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

2007 ஒக்டோபர் 22ம் திகதி அநுராதபுரம் வான் படைத்தளம் மீது மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர்.‘எல்லாளன் நடவடிக்கை’ என்ற சிறப்புப் பெயருடன் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர் நடத்திய இந்தத் தாக்குதலில், முதற் தடவையாக கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழியாகவும் ஏககாலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

சிறீலங்கா போரில் வெற்றிபெற்று முன்னேறிக்கொண்டிருப்பதாக அறிவித்துக்கொண்டிருந்த ஒரு கட்டத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், சிறீலங்காவிற்கு பேரழிப்பாகவும் பெரும் பின்னடைவாகவும் மாறியிருந்தது.

இந்தத் தாக்குதலை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து இணையவழி தேடப்படும் ஒரு நகராகமாக அநுராதபுரம் மாறியிருந்தது. இணையவலையின் தேடுதல் தளமாக உள்ள ‘கூகுள்’ ஊடாக உலகின் பல்வேறு நாடுகளின் ஆய்வாளர்களும், ஊடகவியலாளர்களும் என பலதரப்பட்டவர்களும் அநுராதபுரம் நகர் குறித்தும் தாக்குதல் குறித்தும் சொற்களைக் கொடுத்து தேடத்தொடங்கியிருந்தபோது, அந்தத் தளத்தில் எல்லாளன் நடவடிக்கையை விட முன்னணியில் வந்து நின்றுகொண்டது ஒரு பழைய செய்தி.

‘கூகுள்’போன்ற தேடுதல் தளத்தில் எப்போதும் புதிய செய்திகளும், அதிகம் பார்க்கப்பட்ட செய்திகளுமே முன்னணியில் வந்து நிற்கும். ஆனால், விதிவிலக்காக இந்தத் தாக்குதல் நடைபெற்றதன் பின்னர் முன்னணிச் செய்தியாக 1985ம் ஆண்டு அநுராதபுரம் மகாபோதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பொது மக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் குறித்த செய்திகளே முன்னிலை பெற்றிருந்தன.

மிகவும் திட்டமிட்ட ரீதியில் இவை மேற்கொள்ளப்பட்டிருந்ததை இணையவலையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். ஒரு செய்தியை மற்றவர்கள் அறிந்துகொள்ளும் திசையை மாற்றி, வரலாற்றை மாற்றியயழுத வைப்பதற்கான நடவடிக்கைகளே இவைகள்.

அப்போது மட்டுமல்ல, இன்றும் இவ்வாறான திட்டமிட்ட வேலைகள் மிகவும் கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காணொளிகளை பதிவேற்றுவதற்கும் பார்வையிடுவதற்கும் உலகின் மிகப்பெரும் தளமாக ‘யூரியூப்’ இணையத்தளம் உள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான காணொளிகளை பதிவேற்றுவதை தற்போது யூரியூப் தடுத்து வருகின்றது.

ஏற்றியுள்ள காணொளிகளையும் தேடித்தேடி அழித்து வருவதுடன், தொடர்ந்து பதிவேற்ற முனைபவர்களின் கணக்குகளையும் தடைசெய்து விடுகின்றது. இதில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் இருக்கும் படங்கள், காணொளிகள் மட்டுமல்ல, ஆயுதமற்ற தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த அத்தனை பதிவுகளுக்கும் இந்த நிலைதான்.

10.04.2002 அன்று சர்வதேச நாடுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வழங்கிய செவ்வியைக்கூட பயங்கரவாத இயக்கத்தின் பிரச்சார நடவடிக்கை எனக்கூறி தடை செய்கின்ற அளவிற்கு ‘யூரியூப்’ இணையம் சென்றிருக்கின்றது.

‘முகநூல்’ ,  ‘ருவிட்டர்’  போன்ற சமூக வலைத் தளங்களும்,  ‘கூகுள்’  போன்ற தேடுதல் தளங்களும் இவ்வாறான நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றன. இவை அவர்களால் சுயமாக முன்னெடுக்கப்படுவதில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் உலக இணைய வலையமைப்பிற்குள் இருந்து இல்லாமல் செய்கின்ற வேலையை சிங்களப் பேரினவாத அரசு, சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் மிகவும் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கின்றது.

இன்று ஆவணக் காப்பகங்களாக, நூலகங்களாக இணையத் தளங்களே உள்ளன. மிகவும் இலகுவானதும், விரை
வானதுமான தேடலுக்கான வழியாக இணையத் தளங்கள் பெரும் வரப்பிரசாதமாக இருக்கின்றன.

நாளை இதன் தேவைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பது உறுதி. இந்தநிலையில்தான், இந்த இணையத்தளங்களில் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதாரங்களை இல்லாமல் செய்வதில் மிகவும் நுட்பமான வேலைகள் இப்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதாரங்கள் அத்தனையையும் அழித்துவிட்டதாக நம்பும் சிங்களப் பேரினவாத அரசு, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் கைகளில் எஞ்சியுள்ள ஆவணங்களையும் அழித்துவிட்டால் அடுத்துவரும் ஓரிரு தலைமுறைகளுக்குள் தமிழர்களின் கைகளில் இருக்கும் ஆதாரங்களும் இல்லாமல் போய்விடும் என்று கருதுகின்றதுபோலும்.

31.05.1981 அன்று தென்னாசியாவிலேயே முதல்தரமாக விளங்கிய யாழ். நூலகத்தை எரித்தழித்த சிங்களப் பேரின
வாதத்தின் திட்டம் தமிழ் மக்களின் பொக்கிசமான அறிவுக் களஞ்சியத்தை அழிப்பது மட்டுமல்ல, அங்கிருந்த வரலாற்று ரீதியான தமிழர்களின் ஆதாரங்களையும் அழிப்பதுதான்.

ஆனால், விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததன் பின்னர் தமிழர் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாப்பதிலும் அவற்றைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துச் சேகரிப்பதிலும் விடுதலைப் புலிகள் பெரும் அக்கறை கொண்டிருந்தார்கள்.

111

அதற்காக ஒரு பெரும் குழுவே பணியாற்றிக்கொண்டிருந்தது. உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று பெரும் நிதி செலவழித்து ஈழத் தமிழர்கள் குறித்த பல அரிய வரலாறுத் தகவல்களைச் சேகரித்து வந்தார்கள்.வரலாற்றைக் கண்டறிவதும், அவற்றைப் பாதுகாப்பதும் ஓர் இனத்திற்கு மிகவும் முக்கியம் என்பதனாலேயே, வரலற்று ஆவணங்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு பெரும் நிதியையும் தமிழீழத் தேசியத் தலைவர் ஒதுக்கியும் இருந்தார்.

தமிழர்களின் வரலாற்றைப் பாதுகாத்து அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லும் பெரும் பணி இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் தலையில் விழுந்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக நாடற்றவர்களாக அலைந்து திரிந்த யூத இனம், தாங்கள் வாழ்ந்த மண்ணின் வரலாற்று ஆதாரங்களை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் சென்றதனால்தான் ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னரும் தங்களின் தேசத்தை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது.

தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பை புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் கரத்தில் எடுத்தாகவேண்டும். குறைந்தது ஈழத் தமிழர்களின் மிகப்பெரும் ஆவணக் காப்பகம் ஒன்றை இணையவழியில் என்றாலும் நிறுவவேண்டும்.

உலகில் எங்கிருந்து ஒருவர் தேடினாலும் அவரின் தேடலுக்கு பதில் கிடைக்கும் வகையில் உலகின் பல மொழிகளிலும் இந்த ஆவணக் காப்பகம் நிறுவப்படவேண்டும்.

பொருளாதார வளத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும், அரசியல் பலத்திலும் எழுந்துவரும் புலம்பெயர்ந்த தமிழர்க
ளால் இது சாத்தியமாக முடியாதொன்றல்ல.‘

வரலாறு எனது வழிகாட்டி’  என்று கூறிய தமிழீழத் தேசியத் தலைவர், ’‘வரலாற்றைப் படிக்காமல் வரலாற்றைப் படைக்க முடியாது’  என்பதையும் சொல்லியே வைத்திருக்கின்றார். அதைப்போலதான், வரலாற்றைத் தொலைத்த இனமும் வரலாற்றில் வாழமுடியாது.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு