வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமலை பாராட்டுகிறேன்!

வியாழன் மே 16, 2019

வரலாற்று உண்மையை துணிவுடன் கூறிய கமல்ஹாசனை பாராட்டுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்துஅரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிற நிலையில் ‘தான் சொன்னது சரித்திர உண்மை’ என்று அவர் உறுதிபட கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கோட்சே குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அவர் ஒரு வரலாற்று உண்மையை துணிச்சலாக பேசி இருக்கிறார். அதை வரவேற்று பாராட்டுகிறேன். இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல.

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் நடந்த முதல் பயங்கரவாத நடவடிக்கை காந்தி படுகொலையாகும். அதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கே:- கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று தற்போது கமல்ஹாசன் சொல்லி இருப்பது ஒட்டுமொத்த இந்துக்களையும் காயப்படுத்துவதாக கூறுகிறார்களே?

ப:- இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கமில்லை. கோட்சே இந்து மதத்தை சார்ந்தவர் தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்துள்ளது. கோட்சே வாழ்க, காந்தி ஒழிக என்று அண்மையில் உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபையை சேர்ந்த ஒரு பெண்மணி முழக்கமிட்டார். காந்தி படத்தை பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தான் கமல்ஹாசன் போன்றவர்களை பேச வைத்துள்ளது.

நாதுராம் கோட்சே கிறிஸ்தவரோ, முஸ்லீமோ அல்ல. அவர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பது உலகறிந்த உண்மை. அந்த வரலாற்று உண்மையை அவர் சுட்டிக் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது. சங்பரிவார் அமைப்புகளே அவரை இந்து என்பதால்தானே தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர் கோட்சேவை இந்து என்று உரிமை கொண்டாடலாம், ஆனால் கமல்ஹாசன் அவரை இந்து என்று சொல்லக்கூடாதா?

கே:- கோட்சேவை தீவிரவாதி என்பதை விட பயங்கரவாதி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது ஏன்?

ப:- நானும் வரலாற்று உண்மையைத் தான் கூறுகிறேன். உண்மையில் காந்தியடிகளை இந்து தீவிரவாதி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இந்து மதத்தின் மீது தீவிர பற்றுதலை கொண்டிருந்தார். ஆனால் கோட்சே இந்து தீவிர பற்றாளரான காந்தி அடிகளையே சுட்டுக் கொன்றார்.
 

எனவே கோட்சேவிடம் இருந்தது தீவிரவாதம் அல்ல பயங்கரவாதம். எனவே அவர் ஒரு பயங்கரவாதி என்பதுதான் உண்மை.

 


கே: பிரதமர் மோடி நடிகர் கமல் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே?

ப: அவர் வட இந்தியாவில் நடைபெறும் இறுதி கட்ட தேர்தலுக்கு கமல் எதிர்ப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார். இந்துக்களின் வாக்கு வங்கியை குறி வைத்து நாடகம் ஆடுகிறார். ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒரு தீவிரவாதி இந்துவாக இருக்க முடியாது என்று வேதாந்தம் பேசுகிறார். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் என்ற பழமொழியை நினைவூட்டுகிறது.

மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை நிறுவி இருக்கிறார். அந்த பட்டேல் தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று சொன்னவர். அவர் காலத்தில்தான் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

கோட்சேவை பட்டேல் உள்ளிட்ட இந்து தீவிரவாத சிந்தனையாளர்கள் பயங்கரவாதி என்றே கண்டித்து இருக்கிறார்கள். இவையெல்லாம் வரலாற்று உண்மைகளாகும். வரலாற்றை திரித்து ஆதாயம் தேடுவதை சங்பரிவார் கும்பல் தொழிலாக கொண்டு இருக்கிறது. ஆகவேதான் கமலை அச்சுறுத்துகிறார்கள்.

கே: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலை கடுமையாக எச்சரித்து இருக்கிறாரே?

ப: இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான். தன்னுடைய பதவிக்கான பொறுப்பை உணர்ந்து அவர் பேசியதாக தெரியவில்லை. கலைஞரின் நாக்கை அடக்க வேண்டும் என்று வட இந்திய சாமியார் ஒருவர் எச்சரித்தது போல அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி இருக்கிறார். இதிலிருந்து அ.தி.மு.க.வும் சங்பரிவார் அமைப்பின் ஒன்றாக மாறி வருகிறது என்பதை அறிய முடிகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே: கமலை ஆதரிப்பதில் உங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கிறதா?

ப: வரலாற்று உண்மையை பேசும் கமலை வரவேற்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும். அவரை அச்சுறுத்தி தனிமைப்படுத்துவதற்கு மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் அவருக்கு ஆதரவு கொடுப்பதை ஒரு ஜனநாயக கடமையாகவே கருதுகிறேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் எனக்கு இல்லை.

காந்தியடிகளை கொன்ற கோட்சேவை உயர்த்தி பிடிப்பது காந்திக்கு செய்கிற துரோகம் என்பதைவிட ஜனநாயகத்துக்கும், தேசத்துக்கும் செய்கின்ற துரோகம். இன்னும் பல 10 ஆண்டுகள் ஆனாலும் இந்த விவாதம் இன்னும் விரிவாகவும் வெளிப்படையாகவும் நடந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.