வரும் 26ம் திகதி- குடியரசு தினத்தில் பிரம்மாண்ட உழவு இயந்திர பேரணி!

ஞாயிறு சனவரி 24, 2021

வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாய சங்க பிரதிநிதிகளும் இடையே 11- கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அனைத்துக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இதற்கிடையில் வேளாண் சட்டங்களை இரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான ஜனவரி 26-ம் திகதி விவசாயிகள் சார்பில் மாபெரும் உழவு இயந்திர பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்த உழவு இயந்திர பேரணி டெல்லியின் எந்த சாலை வழியில் நடைபெறும் என்பது குறித்த தகவலை எழுத்துப்பூர்வமாக தரும்படி விவசாயிகளிடம் டெல்லி காவல்துறையினர் கேட்டிருந்தனர்.

இந்நிலையில் உழவு இயந்திர பேரணி எந்த சாலை வழியாக நடைபெறும் என்ற எழுத்துப்பூர்வ தகவலை தற்போது வரை விவசாயிகள் தெரிவிக்கவில்லை என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதி யோகேந்திர யாதவ், திட்டமிட்டபடி 26-ம் திகதி உழவு இயந்திர பேரணி நடைபெறும். தடுப்புகள் திறக்கப்பட்டு நாம் டெல்லிக்குள் நுழைவோம். எங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பேரணி நடைபெறும் சாலை வழி தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இறுதி தகவல்கள் இன்று இரவு தெரிவிக்கப்படும்’ என்றார்.