வட, கிழக்கில் மட்டும் இப்படி ஓர் அராஜகம்

புதன் டிசம்பர் 08, 2021

 இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த இடம் காடாக ஒதுக்கப்பட்ட இடமாகவும் அதேபோல் கூகுள் வரைபடத்தில் பார்த்து கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டுப் பிரதேசமாகவும் ஒதுக்கப்படும் அவலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்   தா. சித்தார்த்தன் தெரிவித்தார்.

 நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள் காடாக்கம் ,வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான கருத்தை முன் வைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு என்ற இரு திணைக்களங்களும் உண்மையில் வனப் பாதுகாப்புக்கா அல்லது வன ஜீவராசிகள் பாதுகாப்புக்கா இருக்கின்றன என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் பரவலாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த இரு திணைக்களங்களினாலும் அங்கு நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கின்ற போது அந்தக்கேள்வி நியாயமாகவே இருக்கும். 2001-2005 லே வந்த வர்த்தமானியின் அடிப்படையிலே சில விடயங்கள் நடைபெறுகின்றன.

6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த இடம் காடாக ஒதுக்கப்பட்ட இடமாகப் பார்க்கப்படுகின்றது. அதேபோல் இந்த கூகுள் வரைபடத்தில் பார்த்து கொஞ்சம் பச்சை வட்டமாக இருந்தால் அதுவும் ஒரு காட்டுப் பிரதேசமாக ஒதுக்கப்படுகின்றது.இவ்வாறான நடவடிக்கைகள் வடக்கு,கிழக்கில் மட்டுமே நடக்கின்றன. வட,கிழக்கில் யாழ்ப்பாணத்தில் குறைவாக இருந்தாலும் வன்னியில் பல இடங்களில் நடக்கின்றன.

83 காலகட்டத்தில் யுத்தம் காரணமாக பெரும்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து நாடு விட்டுச் சென்று அல்லது அந்த இடங்களிலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டு யுத்தம் முடிந்த பின்னர் அந்த இடங்களுக்கு மீண்டும் செல்லும் போது அவர்கள் அங்கு விடாது தடுக்கப்படுகின்றார்கள். அத்துடன் இந்த இரண்டு திணைக்களங்களும் இந்த மக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை எடுக்கின்றன.

காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இருக்கின்ற காடுகளைப் பாதுகாக்க வேண்டுமே தவிர காடுகள் இல்லாத இடங்களை காடுகளாக்கக் கூடாது. மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ள இடங்களும் காடுகளாக்கப்படுகின்றன. அந்த இடங்களில் தென்னை மரங்கள், கமுகு மரங்களே உள்ளன. அதிலே இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் கூட உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுகினறன. இது மிகவும் பாரதூரமான விடயம்.

பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். அவர்கள் திரும்பி வருவதற்கு அவர்களிடம் காணிகள் இல்லை. ஏனென்றால் அவர்களின் காணிகளை சுவீகரித்து விட்டார்கள். அதேபோல் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களும் தமது காணிகளை மீண்டும் எடுக்க முடியாமல் உள்ளது. பற்றைகள் இருக்கும் இடங்களெல்லாம் காடுகள் எனக் கூறி அந்த இடங்கள் எடுக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கின் குடிப் பரம்பலை இன்னும் மாற்றுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த நிலங்கள் ஒரு காலத்தில் மாவட்டங்களுக்கு,மாகாணங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்று அவை பகிர்ந்தளிக்கப்படுகின்றன. நெடுங்கேணியில் 3000 ஏக்கர் காணி இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல வர்த்தகர்களுக்கு ,அரசியல்வாதிகளுக்கு, அரச அதிகாரிகளுக்கு ஏக்கர் கணக்கான காணிகள் நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்படுகின்றன. இவை பின்னர் அவர்களுக்கே சொந்தமாகி விடும் என்பது வேறு விடயம்.


இவ்வாறான நிலையில் வறிய மக்கள் தமது காணிகளை இழந்து செய்வதறியா துள்ளனர். ஆகவே இதனை அமைச்சர் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும். சரியான முறையில் அந்த நிலங்கள் உரியவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

இப்போது காணிகளை உறுதிப்படுத்த காணி உறுதி கேட்கின்றார்கள். நிச்சயமாக உறுதிகள் இருக்காது. ஏனெனில் நீண்ட காலமாக, மிக நீண்ட காலமாக வடக்கில் காணிக்கச்சேரி நடத்தப்படவில்லை. மக்களிடம் உள்ள பொ்மிட்டுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை. சிலர் அதனை தொலைத்தும் விட்டார்கள். இருந்ததற்கான சான்றுகளை அவர்களால் சொல்லக் கூடியதாகவுள்ளது.ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அமைச்சர் இதில் கவனம் செலுத்தி மக்கள் தமது சொந்தக் காணிகளுக்குச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.