வடக்கு போராட்டங்களின் பின்னணியில் சிறிலங்கா அரசாங்கம்

புதன் சனவரி 27, 2021

சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வடக்கில் சில போராட்டங்கள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முன்னணி சிவில் சமூக செயற்பாட்டளரான ச அரவிந்தன் தெரிவித்துள்ளார்.யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான ச.அரவிந்தன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் இளந்தலைவர்களுள் ஒருவருமாவார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (26) செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் செய்வதை அனுமதிக்கமுடியாது .இதனை தமிழக தொப்புள்  கொடி உறவுகளும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் அத்துமீறிவருகிறார்கள் என்பதற்காக அவர்களது உயிர்களை பறிப்பது ஏற்புடையது அல்ல.

இந்திய மீனவர்கள் அத்துமீறி தொழில்செய்வதை டெல்லி-கொழும்பு தலைவர்கள் தமது பேச்சுவார்த்தையில் பேசி முடிக்கமுடியும்.

இதனை விடுத்து தமிழக மீனவர்களையும் இலங்கை வடபகுதி மீனவர்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல.

இதனை இருநாட்டு மீனவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் .குறிப்பாக தமிழக மீனவர்கள் அரசியல் பின்னணியில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னால் யாருள்ளார்கள் என்பதனை கண்டறியவேண்டும்.

தற்போதைய சூழலில் ஜெனிவாவில்   சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படவுள்ள சூழலில் அதனை திசை திருப்புவதற்காக சதிகள் பின்னப்படுகின்றது.
 
வடபகுதி மக்கள் அரசிற்கு ஆதரவாகவும் இந்திய குறிப்பாக தமிழகத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை காண்பிப்பதற்காக அரசாங்கமும் அரசாங்க பிரதிநிகளும் வடபகுதியில் பல போராட்டங்களை முன்னேடுத்து வருகிறார்கள் இந்த விடயங்களை தமிழ்நாட்டு மீனவர்களும் வடபகுதி மீனவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் .

அது மட்டுமன்றி இந்திய அரசாங்கமும் இதனை புரிந்து கொண்டு இலங்கை தமிழ் மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவை பகைப்பதற்காக பல்வேறுவகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில்  தீவக பகுதியில் நெடுந்தீவு,அனலைதீவு மற்றும் நயினாதீவு பகுதிகளிற்கு மின்சாரம் வழங்குவதற்காக சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியைசிறிலங்கா  அமைச்சரவை வழங்கியுள்ளது. இது இந்தியாவிற்கே  பாதிப்பினை ஏற்படுத்தவுள்ளது.

அதிலும் இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள தீவுகளில் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தமிழகத்திற்கும் இலங்கையின் வடபகுதிக்குமே பாதிப்பினை தரும். 

நாளை(27)   புதன்கிழமை யாழ்.மாவட்டத்தில் மீனவர் போராட்டம் ஒன்றிற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு வெவ்வேறு மீனவ சமாச பிரதிநிதிகள் மற்றும் மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய போது இப்போராட்டத்திற்கு தாம் ஆதரவு வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா  அரச நிகழ்ச்சி நிரலில் இவை இடம்பெறுவதால் நாம் இதில் பங்குபற்றமாட்டோம் என அவர்கள் மிக தெளிவாகத்தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலரின் நிகழ்சி நிரலுக்காக இத்தகைய போராட்டங்கள் இடம்பெறுவது ஏற்புடையதல்ல .ஜ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள சூழலில் வடபகுதியில் இடம்பெறும் பேராட்டங்கள் யாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ச. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.