வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாயார் மரணம்!!

புதன் அக்டோபர் 07, 2020

வெள்ளை வானில் கடத்தப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே இன்று மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் 1328 ஆவது நாளாக சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயார் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெள்ளை வானில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய துணை இராணுவ குழுவால் கடத்தில் செல்லப்பட்ட பெரியசாமி செல்வகுமார் (வயது 45) என்ற மகனைத் தேடி போராடி வந்த குறித்த தாயார் அண்மைக்காலமாக மகன் கிடைக்கவில்லை என்ற விரக்தி மன நிலையில் இருந்துள்ளார்.
 
வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு தேவை நிமிர்தம் சென்ற நிலையில் நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா, மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி மனோன்மணி (வயது 70) என்ற தாயாரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.